சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலான் நோன்பு மார்ச் 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமிய பொதுமக்கள் தங்கள் கடமைகளை செய்து ஏப்ரல் 11 ஆம் தேதி ரமலானை வரவேற்க தயாராக உள்ளனர். இந்த பண்டிகை பிறை அடிப்படையில் பின்பற்றப்படும் என்பதால், நேற்று வானில் பிறை தென்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11 ரம்ஜான் பண்டிகையை கொண்டாடலாம் என தலைமை காஜி அறிவித்துள்ளார். இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
வைகோ: சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் என சூளுரைப்போம்.
ராமதாஸ்: அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக உழைக்க உறுதியேற்போம்.
அன்புமணி: அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் பெருக பாடுபட உறுதியேற்போம்.
சு.திருநாவுக்கரசர்: இஸ்லாமியர் வாழ்வில் வளமும், நலமும், மகிழ்வும் பெருகிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
டிடிவி தினகரன்: ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி சிறப்பு தொழுகைகள் மூலம் இறைவனை வழிபட்டு, ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இந்த ரமலான் பெருநாளில் நிறைவேறட்டும்.
அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய மனித குலத்தின் வழிகாட்டி இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும் நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம். ரமலான் பெருநாளில் அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகுவதோடு, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் எனக்கூறி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.