‘‘முதல்வர் போட்டியில் இருப்பவரை முளையிலேயே கிள்ளி எறிய துடிக்கும் கட்சியினரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தாமரை கட்சி வலுவான, பலமான நிலையில் உள்ள நபரை வேட்பாளராக நிறுத்த ஜல்லடை போட்டு தேடி வருதாம். ஆனால், நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகியும் ஒருவரும் சிக்கவில்லையாம். புதுச்சேரியில் யாரை வேட்பாளராக போட்டாலும் தோல்வியை சந்திப்போம். நம்மிடம் இருப்பதிலேயே நல்ல வேட்பாளர் புல்லட்சாமியின் மருமகனும், தாமரை கட்சியின் அமைச்சருமான சிவமானவர் தான் சரியான தேர்வாக இருக்கும் என உள்ளூர் ஆட்கள் நினைக்கிறாங்களாம். டெல்லிக்கு அவரை பற்றி பாராட்டு பத்திரம் அனுப்பி வைச்சிருக்காம். இதுக்கு, அவர் மீது உள்ள நல்ல எண்ணம் காரணம் இல்லையாம். புதுச்சேரி லோக்கல் அரசியல்ல ரொம்ப செல்வாக்குள்ள நபரை அகற்றி டெல்லிக்கு அனுப்பிவிட்டால், முதல்வராக நாம் நிற்கலாம் என்று தாமரை தலைவர்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறார்களாம். தாமரை கூட்டணியில் புதுச்சேரியில் சிவமானவர், உள்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் புல்லட்சாமிக்கு அடுத்த நிலையில் மக்களின் ஆதரவு பெற்ற அரசியல்வாதியாம். லோக்கல் அரசியலிலே இருந்தால், முதல்வர் பதவிக்கு இடைஞ்சலாக இருப்பார் என்று அவருடன் முதல்வர் போட்டியில் இருப்பவர்கள் நினைக்கிறார்களாம். அதோடு அவரை எப்படியாவது டெல்லி பக்கம் தள்ளிவிட்டால், தற்போது அவர் வகிக்கும் அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்கும் என தாமரை தலைவர்கள் பலர் மனக்கணக்கு போட்டு வர்றாங்க. இதனால் எப்போது யார் வந்து அடித்து கேட்டாலும், ஒரே பதில்தான். சிவமானவரை போட்டா… ஒரே ஒரு பொன்னான எம்பி சீட் ஜெயிச்சுடலாம். அவருக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு இருக்குன்னு பாசிட்டிவ்வாகவே சொல்கிறார்களாம். அதை கேட்டு டெல்லி தலைமையும் யோசனையில் இருக்காம். அதாவது ஒற்றை சீட்டா அல்லது மாநிலத்தில் ஆட்சியா என்று கணக்கு போட்டு வருகிறதாம். இதனை தெரிந்து கொண்ட சிவமானவர்.. எது எப்படியிருந்தாலும் நம்முடைய பெயருக்கு புகழ் சேர்க்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என கள்ளமில்லாமல் பேசி சுற்றி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனி மாவட்டத்தில் டபுள் ஆக்டிங் அரசியல் நடக்குதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ம்… ஹனிபீ மாவட்டத்தின் தர்மயுத்த நாயகரின் இரண்டெழுத்து தொகுதி ஹனிபீ ஒன்றியம் முழுக்க இருக்கிறது. இதில் பாம்பின் பெயரில் துவங்கும் ஊராட்சியின் துணை தலைவரானவரின் உறவினர், தர்மயுத்த நாயகரின் வலதுகரமாகச் செயல்படக் கூடியவர். இவர் ஊராட்சி தலைவரை ஓரங்கட்டிவிட்டு, தானே தலைவரைப்போல அதிகாரம் செலுத்தி வருகிறாராம். தான் வைத்ததே சட்டம் என்று கூறி ஊராட்சியின் அன்றாட செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறாராம். நிர்வாகத்தை கையிலெடுத்து சம்பளம் யாருக்கு போடுவது, செலவழிப்பது, தான் சொல்லும் ஆட்களை வேலைக்குச் சேர்க்க வேண்டும் என உத்தரவு போடுவதாக இவர் மீது புகார்கள் கிளம்பி இருக்காம். ஊராட்சி தலைவரை அடக்கமாக ஆபிசில் உட்கார வைத்துவிட்டு இவர் வெளியில் ஆட்சி செய்கிறாராம். இலைக்கட்சி காலத்து தர்மயுத்த நாயகரின் ஆதரவு அதிகாரிகளை, கையில் வைத்துக் கொண்டு தனது காரியங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறாராம். இவரின் அதிகாரம் அத்தனை பேருக்கும் அதிர்ச்சியை தருவதோடு, தலைவர் துவங்கி உறுப்பினர்கள் வரை புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில் அரசியல் இல்லாத அணி அமைத்து ‘மணி’யை கல்லா கட்டுபவர்கள் யாரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி வட்டாரத்துல ரோடு, சாக்கடை, மழைநீர் வடிகால் என முக்கியமான வேலை எல்லாம் நடக்காம இருக்க, நாலு ஒப்பந்ததாரர்கள் குழு ஒன்று காரணமா இருக்காம். சிவில் வேலைக்கு 7 பர்சன்ட், ரோடு வேலைக்கு 10 பர்சன்ட் தந்தாதான் ‘கான்ட்ராக்ட்’ உங்களுக்கு கிடைக்கும். அதையும் மீறி நீங்க இ-டெண்டர் போட்டு வேலை எடுத்து செஞ்சா, உங்களுக்கு ‘பில்’ கிடைக்காது என மற்ற ஒப்பந்ததாரர்களை மிரட்டுகிறார்களாம். இந்த மாநகராட்சியில நாங்க வெச்சதுதான் சட்டம், இதை மீறினால், கட்டம் கட்டுவோம்னு வெளிப்படையா சொல்றாங்களாம். இந்த 4 பேரின் ரேட் டீலிங்கால் மாநகராட்சி வட்டாரத்தில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்ய பல ஒப்பந்த நிறுவனங்கள் தயங்குகிறதாம். இந்த 4 பேருக்கும் கப்பம் கட்ட நம்மளால முடியாதுங்க என நிறைய ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பக்கம் போயிட்டாங்களாம். இந்த நால்வர் அணிக்கு அதிகாரம் கொடுத்தது யார்… இந்த நால்வர் அணியினர் எங்கிருந்து வந்தார்கள்..? என மாநகராட்சி வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறதாம். இவர்களது பின்னணியில் எந்தெந்த அதிகாரிங்க இருக்கிறாங்க என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரும், தங்கள் பார்வையை இந்த பக்கம் திருப்பி இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துல புகுந்து அரசியல் குடைச்சல் கொடுக்க நினைத்த தேனிகார் டென்ஷன் ‘மோடு’க்கு மாறியது எப்படி…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சேலத்துத்தலைவரின் மாவட்டத்துல கடும் நெருக்கடியை கொடுக்க தேனிக்காரர் ரகசிய திட்டத்தை தீட்டினார். தன்னை இலையிலிருந்து வெளியேற்றியவரை தூங்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக அங்கு மாவட்ட செயலாளர்களை நியமித்தாராம். ஆனால் அவர் நினைச்சதுபோல எதுவுமே சேலத்துல நடக்கலை… விசிட்டிங் கார்டை அடிச்சிக்கிட்டு சம்பாதிக்கும் வேலையில தான் கட்சிக்காரங்க ஈடுபட்டாங்களாம். ஆனால் அவர்களை கூண்டோடு தனது அணிக்கு கொண்டுவந்து, சேலத்தில் தேனிக்காரருக்கு பெயர் சொல்வதற்கு ஆட்களே இருக்கக் கூடாதுன்னு சபதம் போட்டு செயல்பட்டுக்கிட்டு இருக்காங்களாம். இதற்காக எந்த பொறுப்பு கேட்டாலும் தர தயாராக இருக்கிறோம்முன்னு வலைவிரிச்சிருக்காங்களாம். ஆனா தேனிக்காரரோ யார் எங்கே போனால் எனக்கென்ன… இலைக்கட்சியோடு சேர்ந்தால் போதும், சன்னுக்கு சீட் கிடைத்தால் போதுமுன்னு மவுன சாமியார் போல மாறிட்டாராம். இந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்ட தேனிக்காரரின் ஆதரவாளர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைபத்தி யோசிக்கத் தொடங்கியிருக்காங்களாம். அதனால்தான் கட்சியின் 52ம்ஆண்டு தொடக்க விழாவை மாங்கனி மாவட்டத்துல யாருமே கொண்டாடலையாம். பெயரளவுக்கு கட்சியின் தலைவர் படத்துக்கு மாலை கூட போடலையாம். மம்மியின் விசுவாசியா இருந்ததினால் அவருக்கு கை கொடுக்கும் வகையில் அவரது அணியில் சேர்ந்து வேலை செய்றோம். ஆனா பொறுப்புல இருக்கிறவங்க என்ன செய்றாங்க என்பதை கூட தெரிந்து கொள்வதில்லை. இதனால அவரை நம்பி உழைக்கிறவங்க ரொம்பவே அப்செட்டா இருக்கோமுன்னு தேனிக்காரர் கோஷ்டியிடினர் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.