‘‘ஆய்வுக்கு வந்த மேலதிகாரியை ‘பவர்கட்’ அடித்து சமாளித்த கில்லாடி பெண் போலீஸ் அதிகாரி எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துக்கொள்வார்னு புன்னகைத்தாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி காக்கி துறையில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள வடமாநில பெண் ஐபிஎஸ், வந்த வேகத்தில் தடாலடி ஆய்வுகளில் இறங்கிட்டாராம்.. சமீபத்தில் நகர பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் விசிட் அடித்த ஐபிஎஸ், கணினியை பார்வையிட்டு குற்றப்பதிவுகள் பதவியேற்றம், நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்தாராம்.. இதனால் ஆடிப்போன காக்கி தரப்பு, இத்தகவலை அரசல் புரசலாக்கவே மற்ற ஸ்டேஷன்களிலுள்ள காக்கிகள் உஷாராகி இருக்காங்க.. மறுநாள் கிராமப்புற காவல் நிலையத்துக்கு பெண் ஐபிஎஸ் விசிட் அடிச்சிருக்காங்க.. அங்கிருந்த காவல் நிலைய அதிகாரியான அம்மணியோ, எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக இருந்தாராம்.. இதற்கு ‘‘பவர்கட்”தான் முக்கிய காரணமாம்.. அதாவது ஆய்வுக்கு வந்த ஐபிஎஸ், கணினி பதிவேடுகளை பார்க்க முடியாமல் போகவே உடனடியாக திரும்பி விட்டாராம்.. ஆய்வுக்குப்பின் அம்மணியிடம், அங்கிருந்த காக்கிகள் எப்படி மேடம் உங்களால் கூலாக இருக்க முடிந்ததுனு கேட்க, எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்வார்னு கூறிவிட்டு புன்னகைத்ததுதான் ஹைலெட்.. விவரம் புரியாமல் விழித்த காக்கிகளோ கரண்ட் காரனை அம்மணி தயார்படுத்தி சக்சஸ் செய்து விட்டார்னு அவரது நெருக்கமானவர்கள் போட்டு உடைத்தார்களாம்.. அதாவது புதுச்சேரியின் மின்துறையும், உள்துறையும் ஒருங்கிணைந்த திட்டமிட்ட வேலைதான் இதுன்னு ரகசியத்தை உடைக்கவே ஆடிப்போய் விட்டார்களாம் காக்கிகள்.. இதுதான் புதுச்சேரியின் தற்போதைய ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜிஎஸ்டி பில் கொடுக்காமலேயே சேல்ஸ் கணக்கு காட்டுறதை கடைபிடிக்கிறாங்களாமே கடைக்காரங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய ஊர்ல இருக்குற பல கடைகள்ல சேல்ஸ் செய்ற பொருட்களுக்கு முறையான ஜிஎஸ்டி பில் கொடுக்குறதே இல்லையாம்.. அப்படியே பில் கொடுத்தாலும் அது சாதாரண பேப்பரில் எழுதப்பட்ட பில் தான் கொடுக்குறாங்களாம்.. சோதனை செய்ய வர்ற அதிகாரிகளுக்கு ‘ப விட்டமின்’ கொடுக்குறதால ரெய்டு வர்றதுக்கு முன்னாடியே எல்லாத்தகவலும் கடைக்காரங்களுக்கு போய்டுதாம்.. இதனால ரெய்டு டைம்ல மட்டும், விற்பனை செய்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி பில் கொடுத்து கணக்கு காட்டுறாங்களாம்.. மற்ற நேரங்கள்ல வழக்கம் போல சாதாரண பில் கொடுக்குறாங்களாம்.. இதனால கவர்மென்ட்டுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில, பெரிய இழப்பு ஏற்படுதாம்.. இந்த சாதா பில் கொடுக்குறது மிஸ்டர் பத்தூர் மாவட்டம் மட்டுமில்லாம, வெயிலூர், குயின்பேட்டை மாவட்டங்கள்லயும் அதிகளவுல நடக்குதாம்.. இதனால துறை சார்ந்த அதிகாரிங்க உரிய விசாரணை நடத்தி, ஜிஎஸ்டி இல்லாத பில் கொடுப்பதை கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சமூக ஆர்வலர்கள்கிட்ட இருந்து கோரிக்கை குரல் எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காகவே அரசு பணியை உதறிவிட்டு வந்தவர்பற்றி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என அழைக்கப்படும் கோயிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்றாங்க.. கோயிலுக்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்களிடம் ‘சாமி பெயரை’ கொண்ட நபர் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம்.. இதற்காக, இவரு பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் வேலையை உதறி விட்டு, இந்த வேலையில் முழுநேர பணியாக ஈடுபட்டு வருகிறாராம்… அந்த வகையில், தினமும் ‘விட்டமின் ப’ அதிகளவில் சம்பாதித்து விடுகிறாராம்.. கோயில் நிர்வாக அதிகாரிகளின் கவனத்துக்கு சென்று விடாமல் இருக்க சம்பாதிக்கும் பாதி பணத்தில் கோயிலில் உள்ள சில முக்கிய நபர்களுக்கு கொடுத்து அவர்களை கரெக்ட் பண்ணி வைத்துள்ளாராம்.. இந்த விவகாரம் வெளியில் கசிந்ததால் ‘விட்டமின் ப’ வாங்கும் கோயில் முக்கிய நிர்வாகிகள் கிலியில் உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி தலைவரின் விமர்சனத்தை தாங்க முடியாம ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு நடந்தாலும் இலைக்கட்சி தலைவரின் ஊரில் எந்த கிளர்ச்சியும் ஏற்படலையாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரை, மலராத கட்சியின் மாஜி போலீஸ் ஆபீசர், காதுகொடுத்து கேட்க கூடாத வார்த்தையை சொன்னதோடு மட்டுமல்லாமல், கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவருன்னும் வெளிப்படையாகவே பேசிட்டாராம்… இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இலைக்கட்சி தொண்டர்கள், கர்நாடக மாஜி போலீஸ் அதிகாரியை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டத்துல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.. அதுவும் தூங்கா நகரத்துல தோல்வியடைந்த வேட்பாளர், போலீஸ் கமிஷனர் ஆபீசுல போய் புகாரே கொடுத்திட்டாராம்.. இப்படி தென்மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இலைக்கட்சியின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் என மூன்று பதவியை மொத்தமா வைத்திருக்கும் இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில், எந்த கிளர்ச்சியும் ஏற்படலயாம்.. கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பது, இந்த மாவட்டத்திற்கே பெருமை என அடிக்கடி கூறி அவர் ரொம்பவே பெருமைப்படுவாராம்.. இவ்வளவு பெருமையுள்ள மாங்கனி மாவட்டத்துல, எந்த எதிர்ப்பும் கிளம்பாதது கட்சியோட தொண்டர்களுக்கே ஷாக்கா இருக்காம்.. அதுவும் இலைக்கட்சி தலைவரின் நண்பர் என்ற புகழோடு இருக்கும் மா.செயலாளர் கூட கோஷம் எழுப்பலயாம்.. மம்மியை பார்த்து யாராவது இப்படியெல்லாம் பேசியிருந்தால், கட்சித் தொண்டர்கள் பொறுத்துப் போவார்களா, பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த நேரத்தில் நன்றாக சம்பாதித்துவிட்டு, தற்போது பதுங்கிக்கொள்வது நியாயமா, சேலத்துக்காரர் என்றால் இளக்காரமா இருக்குதான்னு இலைக்கட்சி தலைவரின் விசுவாச தொண்டர்கள் கேள்வி எழுப்புறாங்களாம்.. அதே நேரத்தில் இந்த அமைதிக்கான காரணம் என்னன்னு நிர்வாகிகளிடையே விவாதம் வேறு நடக்குதாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.