‘‘ஆதரவாளர்களை ஓடி ஓடி கவனிக்கிற இலை கட்சியின் மாஜி அமைச்சர் பற்றி தெரியுமா?..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர், மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களின் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.. குறிப்பாக, துக்க நிகழ்ச்சிகளையும் மிஸ் பண்ணுவது இல்லையாம்.. ஒருவேளை வெளியூர் சென்றிருந்தாலும் சொந்த ஊர் திரும்பிய பிறகு, ஆதரவாளர்களின் வீட்டிற்கு சென்று விட்டு வருகிறாராம்..
அந்த அளவுக்கு இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘கவனித்து’ வருகிறராம்.. இதற்கு முக்கிய காரணம், டெல்டாவில் எந்நேரத்திலும் இலை கட்சியில் மாற்றம் வரலாம்னு இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நினைக்கிறது தானாம்.. இதனால் பலரின் பதவிகளில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியமில்லையாம்.. ஆதரவாளர்கள் நம் சொல்லுபடி கேட்டு நடந்தால், தன்னை ஒண்ணும் செய்ய முடியாதுனு இலை கட்சியின் மாஜி அமைச்சர் நினைக்கிறாராம். இதனாலேயே இந்த கவனிப்பு எல்லாம் நடக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடு முழுவதும் தேசிய கொடியை பெருமைப்படுத்த பெரும் பிரசாரமே செய்த தாமரை கட்சியோட பிரதிநிதி தனது உறுப்பினர் அலுவலகத்திற்குகூட கொடியேற்ற போகலையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட வேளையில் தாமரை கட்சியின் தேசிய தலைமை கடந்த சில நாட்களாகவே தேசியக்கொடி, ஊர்வலம், வாட்ஸ்அப் டிபி, செல்பி என்று தேசியக்கொடியை பெருமைப்படுத்த பெரும் பிரசாரமே செய்து வந்ததது.
ஆனால், தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்தில் தாமரை கட்சியின் பிரதிநிதியா இருக்கிறவர் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்திற்கு வருவதே இல்லை.. அவரோட அலுவலகமும் ஒருபோதும் திறக்கப்படுவது கிடையாதாம்… தேசிய தலைமை கூவிகூவி பிரசாரம் செய்தும் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கூட தாமரை கட்சி பிரதிநிதி சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றவில்லையாம்.. அங்கு வெற்றுக்கம்பத்தை தான் பார்க்க முடிஞ்சிருக்கு.. வருஷத்தில ஒரு நாளாவது அலுவலகம் வந்து தேசியக்கொடியை ஏற்றிச்செல்லலாமே என்று அவரது கட்சியினரே குறைபட்டுக்கொண்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் தூங்கா நகர நிர்வாகிகள் தங்களுக்குள்ளே கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வர்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியின் தமிழக முக்கிய நிர்வாகியை, தூங்கா நகரத்தின் மாஜி அமைச்சர்கள் மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்து வருவது அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ‘வேறு கட்சியை சேர்ந்த அவங்களே எங்களை கேவலமாக பேசும்போது, நாங்க சும்மாயிருக்க முடியுமா? நாங்களும் எங்களுக்குள்ளே ரொம்ப கேவலமாய் பேசிக்குவோம்…’ன்னு கூறுவதுபோல, தூங்கா நகர தாமரை கட்சியினர், சமூக வலைத்தளங்களில் தங்களுக்குள் கடுமையாக வார்த்தை மோதலில் ஈடுபட்டு வர்றாங்களர்…
குறிப்பாக, கட்சியின் மாவட்ட தலைமை தரப்புக்கும், எம்பி தேர்தலில் போட்டியிட்டு 2ம் இடம் பிடித்த மாநில நிர்வாகி தரப்புக்கும்தான் இந்த மோதல் எகிறிகிட்டு இருக்காம்.. ‘நான் இறங்கி வேலை பார்த்ததால்தான், தூங்கா நகர் தொகுதியில் இரண்டாமிடம் கிடைச்சது’ன்னு மாவட்ட தலைமை தரப்பும், ‘இது எனக்கான தனி செல்வாக்கு… இதுல உரிமை கொண்டாட வேண்டாம்’னு மாநில நிர்வாகி தரப்பும் மார்தட்டிக் கொள்கிறதாம்… இரு தரப்பும் ஒருவரைப் பற்றி ஒருவர், மாறி மாறி சமூக வலைத்தளங்களில் மிக கடுமையாக வறுத்தெடுத்து வர்றாங்களாம்..
குவித்த சொத்துகள் துவங்கி, பாலியல் குற்றங்கள் வரை அடுத்தபடியா வரிசையாக ஆதாரங்களுடன் வெளியிடுவோம்னு இருதரப்புமே கூறி வருகின்றனராம்.. இது தாமரை கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.. வந்த 2ம் இடத்தையே, அடுத்த தேர்தலில் சோலியை முடிச்சு விட்டுருவாங்க போலயேன்னு அக்கட்சியினர் புலம்பி வர்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பட்ஜெட் விளக்க தாமரை பார்ட்டி கூட்டத்தில் வாய்ப்போர் மூண்ட கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் என்று தொடங்கி ஆறுல முடியுற நகரத்துல கடந்த சில நாட்களுக்கு முன்னாடி, ஒன்றிய அரசோட பட்ஜெட்டை விளக்கி கூட்டம் நடத்துனாங்க..
இந்த கூட்டத்துக்கு அந்த நகரத்தோட பிரசிடெண்ட் எந்த முன் ஏற்பாடுகளையும் செய்யவே இல்லையாம்.. இதனால நார்த் டிஸ்ட்ரிக் செக்ரட்ரியானவரு, இனி இதுபோல நடந்தா உன் பதவி காலியாகிடும்னு வசைபாடினாராம்.. இதற்கு நகர பிரசிடெண்ட்டின் ஆதரவாளர்கள் அந்த நார்த் டிஸ்ட்ரிக் பிரசிடெண்டை பார்த்து, கட்சியை நீ வளர்க்கவே இல்ல, உன் பதவியே பறிபோகப்போகுது, நீ அவர் பதவியை பறிக்க போறியான்னு கூட்டத்துலயே வாய்ப்போர் நடந்துச்சாம்..
இதை பார்த்து கோபடைஞ்ச, ஸ்பெஷல் கெஸ்டான ஏழுமலை சாமி பெயர் கொண்டவரு, நகர பிரசிடெண்ட்டையும், டிஸ்ட்ரிக் பிரசிடெண்டையும் வறுத்தெடுத்த பின்னாடி, உங்க 2 பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கப்படும்னு கோபத்தோட புறப்பட்டு போனாராம்.. அப்போது அங்க இருந்த நிர்வாகிகள் மாநில தலைமையே கலையப்போகுது, இவர் என்ன டிஸ்ட்ரிக், நகரத்தையும் கலைக்குறதுன்னு முணுமுணுத்துட்டு போனாங்களாம்.. கூட்டத்துல ஒன்றிய அரசை பாராட்டி பேசியதை கேட்டாங்களோ இல்லையோ, இவர்கள் வசைபாடியதை கேட்டுக்கிட்டு போனாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.