‘‘மீன் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வசூலித்த ரூ.72 லட்சம் அரசு கஜானாவுக்கு போகாமலேயே மாயமானதுபற்றி விசாரணை நடக்குறதா சொல்றாங்களே.. உண்மை தானா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. கோவை மாநகராட்சி மத்திய மண்டல எல்லைக்குள் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சில்லரை மீன் மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு இருக்கு.. இங்கு, 72 சில்லரை மீன் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதற்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.72 லட்சம் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த பணம் அரசு கஜானாவுக்கு செல்லாமல் மாயமாகி விட்டதாம்.. இது, தற்போதையை தணிக்கையில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.. டெபாசிட் தொகை வசூலிக்கும்போது உதவி கமிஷனராக இருந்த ஒருவர், நிர்வாக பொறியாளராக பதவி உயர்வு பெற்று, மதுரைக்கு இடமாறுதலாகி சென்று, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, பணி ஓய்வு பெற்றுவிட்டார். அப்போது, உதவி வருவாய் அலுவலராக பணியில் இருந்த ஒருவர், தற்போது உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று கோவை பிரதான அலுவலகத்தில் பணிபுரிகிறாரு.. அப்போது உதவியாளராக இருந்த இன்னொருவர், தற்போது உதவி வருவாய் அலுவலராக பதவிஉயர்வு பெற்று, மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பணிபுரிகிறாரு.. இவர்கள், மூவரும்தான் இந்த ரூ.72 லட்சத்துக்கு ெபாறுப்பு. ஆனால், இந்த மூவருமே இந்த பணம் பற்றி பேச மறுக்கிறார்களாம்.. அதனால், மேலதிகாரியின் விசாரணை தீவிரம் அடைந்து இருக்காம்.. இந்த விவகாரத்தில், யார் யார் தலை உருளப்போகிறது என தெரியவில்லை என்கிறார்கள் சக மாநகராட்சி அதிகாரிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லாட்டரி பிரபலத்தின் வாரிசு திடீரென அரசியலில் குதிப்பதால் அப்செட்டில் இருக்கிறாராமே புதுச்சேரி தொழிலதிபர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் தோப்பு பெயர் கொண்ட முதல்வர் பதவி ராசிக்கான தொகுதியில் அரசியல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்ட முழம்குமாரரான தொழிலதிபர் அபார வெற்றி கண்டார். இந்த மகிழ்ச்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. முதல்வர் பதவிக்கு போட்டியிட அதே தொகுதியை பவர்புல் நிர்வாகி கேட்கவே விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் முழம்குமார். அதை தொடர்ந்து தொகுதி மாற முடிவெடுத்த முழம்குமார், அங்கிருந்து வடமாநிலத்தவர் அதிகளவில் குடியிருக்கும் கர்மவீர பெயர் கொண்ட தொகுதிக்கு இடமாறினார். இருப்பினும் தனது வாரிசை தோப்பு தொகுதியில் நிறுத்தினார். தந்தையும், மகனும் வெற்றிக்கண்ட நிலையிலும் தனது தொகுதி மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முழம்குமார் திணறுவதாக விமர்சனங்கள் வலைதளத்தில் பரவின. வாரிசுக்கும் அவரது தொகுதியில் சறுக்கல் இருப்பதாகவே அரசியலில் தகவல் உலாவுகிறது.
இது ஒருபுறமிருக்க, சென்னை லாட்டரி பிரபலத்தின் வாரிசு தற்போது திடீரென புதுச்சேரிக்குள் கால்பதிக்கவே அப்செட்டில் இருக்கிறதாம் முழம்குமார் தரப்பு. தனது தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு நகர வேண்டிய நிர்ப்பந்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் ஒன்றிய பவுர்புல் கட்சி மீதும் அதிருப்தியில் உள்ளாராம்.. தனக்கு நேர்ந்த பாதிப்பு, வாரிசுக்கும் வந்து விடக்கூடாது என்பதால் உஷாரான அவர், மாற்றுத் தொகுதியை தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம்.. விரைவில் களப்பணிகளை முழம்குமார் அங்கு தொடங்க இருப்பதாக பரவும் தகவலால் தொகுதி கட்சித் தரப்பு விழிபிதுங்கி நிற்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லாட்ஜ்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் ரெய்டு நடத்தி தடுக்கணும்னு குரல் ஒலிப்பது பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலுக்கு பெயர் போன வெயிலூர்ல மருத்துவம், கல்வி, ஆன்மிகம்னு வெளிமாநில மக்களோட வருகை நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டே போகிறது.. குறிப்பாக வெயிலூர் சிட்டியில ஹாஸ்பிடல்ஸ்களை சுற்றிலும், ஏராளமான லாட்ஜஸ் இயங்கி வருது.. இதுல ஒரு சில லாட்ஜ்கள்ல வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய ஆவணங்கள் இல்லாமலேயே தங்க வைப்பதாக சொல்றாங்க.. ஒரு சில லாட்ஜ்களில் 24 ஹவர்ஸ் தடை செய்த புகையிலை பொருட்கள், சரக்கு பாட்டில்ஸ் என்று எல்லாமே தடையில்லாம கிடைக்குதாம்.. இதனால சம்பந்தப்பட்ட காக்கிகள் ரெய்டு நடத்தி, தப்புக்கு துணை போகிற காக்கிகள் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிணற்றை காணோம் வடிவேல் பட காமெடி பாணியில் இலைக்கட்சி ஆட்சியில் கட்டின தடுப்பணைகளுக்கான சுவடே இல்லையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடல் மாவட்டத்தில் கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பட்டன. வறட்சிக்கு பெயர் போன ‘தண்ணியில்லா காடு’ மாவட்டம் என்பதால், மழைநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் மாநிலத்திலேயே அதிகளவிலான தடுப்பணைகள் கட்டும் பணி இங்குதான் நடந்தது. 11 யூனியன்களுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் இடத்திற்கு ஏற்றவாறு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, திட்டப்பணிகள் நடந்தன. ஆனால், திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல், ஒப்பந்ததாரர்களும், இலைக்கட்சியினரும் சேர்ந்து லாபம் பார்க்கும் நோக்கத்தில் தனியார் விவசாய நிலங்கள், காலியிடங்கள், நீர் வழித்தடங்களில் கட்டியுள்ளனராம்.. இதனால், பயன்பாடற்ற நிலையில் நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் தடுப்பணை கட்டிய சுவடு கூட இல்லையாம்.. பெயரளவில் இருந்த சில தடுப்பணைகளும் சமீபத்தில் பெய்த மழைக்கு அடித்துக் கொண்டு சென்று விட்டதாம்.. எனவே, இலைக்கட்சி ஆட்சியின்போது தடுப்பணைகள் கட்டுவதில் நடந்த மோசடி குறித்து உரிய முறையில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று ஒலிக்கிறதாம் மாவட்டத்து மக்களின் கோபக் குரல்..’’ என்றார் விக்கியானந்தா.
லாட்டரி வாரிசு அரசியலில் குதிப்பதால் அப்செட்டில் இருக்கும் தொழிலதிபர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0