கயானா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், 40 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.புராவிடன்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 160 ரன், வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்னுக்கு சுருண்டன. இதைத் தொடர்ந்து, 16 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்திருந்தது.
3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்டு 23 ரன் மட்டுமே சேர்த்து எஞ்சிய 5 விக்கெட்டையும் பறிகொடுத்தது (246 ரன், 80.4 ஓவர்). வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 18.4 ஓவரில் 4 மெய்டன் உள்பட 61 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். குடகேஷ், ஜோமல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடங்கியது. கடுமையாகப் போராடிய அந்த அணி 66.2 ஓவரில் 222 ரன் மட்டுமே எடுத்து 40 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குடகேஷ் அதிகபட்சமாக 45, கவெம் ஹாட்ஜ் 29, ஜோஷுவா டி சில்வா 27, கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட், ஜோமல் வாரிகன்* தலா 25 ரன், கீசி கார்டி 17, அதனேஸ் 15, ஷமார் ஜோசப் 11 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா, கேஷவ் மகராஜ் தலா 3, வியான் முல்டர், டேன் பியட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை, தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வியான் முல்டர் ஆட்ட நாயகன், கேஷவ் மகராஜ் தொடர் நாயகன் விருது பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி டிரினிடாட், பிரையன் லாரா ஸ்டேடியத்தில் ஆக.23ம் தேதி நடைபெறுகிறது. 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் ஆக.26, 28ல் நடக்க உள்ளன.