காஷ்மீர்: காஷ்மீரிகளின் உயிரிழப்புகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல்களால் உயிரிழந்த காஷ்மீரிகளுக்கு தேசிய அளவில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு, நாடு முழுவதும் உரிய வருத்தம் தெரிவிக்கப்பட்டாலும், பாகிஸ்தானின் எல்லைத் தாக்குதல்களால் உயிரிழந்த காஷ்மீரிகளின் இழப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
ரஜோரி, பூஞ்ச், உரி, பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இந்த உயரிழப்புகள் தேசிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. பூஞ்சில் 12 வயது இரட்டையர்கள் ஸோயா மற்றும் ஆயன் கான் உள்ளிட்ட பலர் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். ராம்பனில் மாவட்ட மேம்பாட்டு ஆணையர், ரஜோரியில் மூத்த அதிகாரி ராஜ் குமார் தப்பா ஆகியோரும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு தேசிய அளவில் இரங்கல் மட்டுமே கிடைத்தது.
அவர்களின் பின்னணி குறித்த செய்திகள் வெளியாகவில்லை. பஹல்காம் தாக்குதல் விசயத்தில், பிரதமர் மோடியின் கடுமையான பதிலடி கொடுக்கும் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். அதேநேரம் காஷ்மீரிகளின் உயிரிழப்புகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.