திருவள்ளூர்: ஆவின் தொழிற்பேட்டைக்கு பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3,500க்கும் மேற்பட்ட லிட்டர் பால் வீணாகக்கொட்டி ஆறாக ஓடியது. சென்னை திருக்கழுக்குன்றம் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு நேற்று அதிகாலை சுமார் 7,400 லிட்டர் பாலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை லட்சுமணன் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் காக்களூர் தொழிற்பேட்டை அருகே வந்தபோது எதிரே டிப்பர் லாரி ஒன்று தறிகெட்ட வேகத்தில் வந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க லட்சுமணன் தான் ஓட்டி வந்த லாரியை லேசாக பக்கவாட்டில் திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த அவரது லாரி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த 7,400 லிட்டர் பாலில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட லிட்டர் பால் லாரியில் இருந்து கொட்டி வீணாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் ஆறாக ஓடியது. இதனையயடுத்து தகவல் அறிந்த பால்பண்ணை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.