ஆம்பூர்: ஆம்பூர் அருகே அரசு டவுன் பஸ் மீது லாரி மோதியதில் பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பேரணாம்பட்டிற்கு இன்று அதிகாலை 5.45 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. டிரைவர் ராஜா என்பவர் பஸ்ஸை ஓட்டி சென்றார். கண்டக்டர் குணசேகரன் உள்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வட மாநிலத்தை சேர்ந்த லாரி வந்தது. இந்த லாரி, பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. பஸ் டிரைவர் ராஜா, முஹம்மத்ஆசிப்(56), மகாலிங்கம்(62), ரம்யா(20), ரோஜா(29), தில்ஷாத்(57), ராதிகா(31), ரீனா(28), ஜெயகொடி(35), பிரியா(37), ஜெய(42) ரஞ்சனி(22) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
லாரியை ஓட்டி வந்த உபேத்பாஷா(42) என்பவர் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர் ராஜா வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ரஞ்சனி, சசிபாலா மற்றும் உமாசங்கர் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.