மேலூர்: சென்னையில் நடந்த பொதுக்குழுவுக்கு சென்று திரும்பிய மதிமுக நிர்வாகிகள் 3 பேர், மேலூர் அருகே லாரி மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை, அண்ணா நகரில் மதிமுகவின் 30வது பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் பச்சைமுத்து (45), மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி நிர்வாகியான இவரது சகோதரர் அமிர்தராஜ் (42), மதுரை மாநகர் இளைஞரணி துணை அமைப்பாளர் புலிசேகர் மற்றும் கட்சி நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். பொதுக்குழு முடிந்து இரவு மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.
சென்னையில் இருந்த பச்சைமுத்து மனைவி வளர்மதியும் உடன் வந்துள்ளார். காரை அமிர்தராஜ் ஓட்டினார்.நேற்று காலை 7.30 மணியளவில் மேலூர் அருகே நான்குவழிச்சாலை சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பச்சைமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வளர்மதி, பிரபாகரன் ஆகியோர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பொதுக்குழுவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலியானது கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.