சென்னை: லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை பல்கலைக்கழக ஊழியர், அவரது தந்தை உயிரிழந்தனர். கிண்டி லேபர் காலனியை சேர்ந்தவர் ரத்தினசாமி (77). சென்னை லைட் ஹவுஸ் ஓய்வுபெற்ற ஊழியர். இவரது மகன் வேல்முருகன் (45). சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் ரமேஷ் (40), சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். ரத்தினசாமி மற்றும் ரமேசுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் இருக்கும் சித்த மருத்துவரை சந்தித்து மருந்துகள் வாங்க சென்னையில் இருந்து 3 பேரும் காரில் புறப்பட்டனர்.
பின்னர் சித்தா மருந்துகளை வாங்கிவிட்டு, சேலம் வழியாக நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை வேல்முருகன் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை திண்டிவனம் புறவழிச்சாலையில் நத்தமேடு என்ற பகுதியில் வந்தபோது, இவர்களுக்கு முன்னாள் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திட்டக்குடியை சேர்ந்த டிரைவர் ராஜா(35) என்பவர் ஓட்டி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக வேல்முருகன் ஓட்டி சென்ற கார் மோதியது. இதில், அப்பளம் போல் நொறுங்கி சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பாய்ந்தது.
தகவலின் பேரில், அங்கு வந்த திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கார் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த ரத்தினசாமி, வேல்முருகன், ரமேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் ரத்தினசாமி, ரமேஷ் ஆகியோர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. வேல்முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து திண்டிவனம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டிரைவர் வேல்முருகனின் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.