நியாயத் தராசு சரியான அளவைக் காட்டுவதுபோல, எப்போதும் நியாயத்தைப் பேசும் ராசிக்காரர் நீங்கள். எதிலுமே நடுநிலையாகவே இருக்க விரும்புவீர்கள். ‘‘ஏம்பா… நீயே இந்த நியாயத்தைச் சொல்லு’’ என்று பலரும் உங்களிடம் பிரச்னையைச் சொல்லி தீர்ப்பு கேட்பார்கள். குளிர்வான, சுகமான சுக்கிரனே இந்த துலா ராசியை ஆட்சி செய்கிறார். இந்த ராசிக்குள் சித்திரை நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும், சுவாதி, மற்றும் விசாகம் 1,2,3 பாதங்களும் இடம்பெறுகின்றன. அழகியல் தத்துவத்திற்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசியாதிபதியாகவும் வருவதால், வேறு எவரும் வீட்டிற்குத் தராத முக்கியத்துவத்தை நீங்கள் தருவீர்கள். நீதி கிரகமான சனி, துலாம் ராசியில் உச்சமாகிறது. எனவே நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். துலாம் ராசி என்பது சுக்கிரனுக்கு எழுச்சி வீடு.
ஒரு சிறிய விஷயத்தை இங்கு புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ரிஷப ராசியையும் சுக்கிரனே ஆள்கிறார். அந்த சுக்கிரனுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ரிஷபச் சுக்கிரன் சூட்சும சுக்கிரன். ஆனால், துலாம் ராசியில் வரும் சுக்கிரனோ அனுபவச் சுக்கிரன். ‘‘வீடு எப்போ கட்டணும்னு எனக்குத் தெரியும். அந்த இடத்துக்கு வேணும்னே விலையை ஏத்தறாங்க. தானா விலை குறையும். அப்போ வாங்கலாம்’’ என்பீர்கள்.
‘‘லட்சத்துல போறதைப் போய் திடீர்னு கோடிக் கணக்குல சொன்னா உடனே வாங்கிடறதா? அந்த இடத்தை வாங்கறதுல ஒண்ணும் லாபம் இல்லை’’ என்று ஆழமாக யோசிப்பீர்கள். ‘‘கிராமத்துப் பக்கம் இருக்கற விளைநிலங்களெல்லாம் வைரம் மாதிரி. இங்க வாங்கறதுக்கு அங்க வாங்கலாம்’’ என்று திட்டத்தையே திருப்பிப் போட்டு யோசிப்பீர்கள். மண்ணின் வகை பார்த்து தனிமங்களைச் சொல்லும் அளவுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ராசியில் அதிகம் உண்டு. உங்கள் ராசியான துலாத்திற்குரிய அதிபதியே சுக்கிரன்தான். கட்டிடங்களுக்கு உரியவனும் சுக்கிரன்தான். எனவே இந்த ராசியில் பிறந்தவர்களில் நிறைய பேர் இன்டீரியர் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் பிரகாசமாக இருப்பீர்கள்.
எதைக் கொடுத்தாலும் அதை அழகாக்கித் திருப்பித் தருவீர்கள். அப்படி இருக்கும்போது வீட்டை எப்படி அழகுபடுத்துவீர்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். பழைய பொருளைக் கொடுத்தால்கூட பழமை மாறாமல் நவீனமாக காட்டுவீர்கள். அறுநூறு சதுர அடி இடத்தில் ஆறு வீடுகள் இருந்தால், வாங்க வேண்டுமா என்று யோசிப்பீர்கள். ‘‘எனக்கு தனியா ஐநூறு சதுர அடி இடம் கிடைச்சாலே போதும்’’ என்பீர்கள். அதிலும் கொஞ்சம் இடம் ஒதுக்கி, மரம் நட்டு வளர்ப்பீர்கள். வேறுவழியில்லாமல் வாடகை வீட்டில் இருப்போர்கூட நான்கைந்து நாட்கள் விடுமுறையில் தோப்பு, தொரவு என்று மனசுக்கு இதமாகச் சென்று தங்கி விட்டு வருவீர்கள்.
துலாம் ராசிக்கு நான்காம் வீடான மகரச் சனிதான் வீட்டு விஷயத்தை நிர்ணயிக்கிறது. அதனால் சேரி (வேளச்சேரி, திட்டச்சேரி), பாக்கம் (நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம்), கரை (அணைக்கரை, பாலக்கரை) என்று முடியும் இடங்களில் இடமோ, வீடோ கிடைத்தால் தயங்காது வாங்குங்கள். மேலும் இடுகாடு, சுடுகாடு, மகான்களின் ஜீவ சமாதிக்கு அருகில் கிடைத்தால்கூட விட்டு விடாதீர்கள். ‘‘இங்க போய் வாங்கலாமா’’ என்று கேட்காதீர்கள்.
‘‘முன்னாடி இந்த இடமெல்லாம் குப்பை கூளமா இருந்தது. இப்போ அதையெல்லாம் சுத்தம் பண்ணி பிளாட் போட்டு விக்கறாங்க. ஓஹோன்னு வளருது ஏரியா’’ என்று நீங்கள் வாங்கிய பிறகு சொல்வார்கள். ஜெயிலுக்கு அருகில், தானியக் கிடங்குகள், இறைச்சியைப் பதப்படுத்தி வைக்கும் கூடம் போன்ற இடங்களின் அருகில் இடம் வந்தால்கூட வாங்கிப் போடலாம்.
கட்டிட ஸ்தானாதிபதியான சனியே உங்களின் புத்திர ஸ்தானாதிபதியாக வருகிறார். அதனால் பையனின் பொருட்டு இடம் வாங்குவதாகச் சொல்வீர்கள். ‘‘எனக்கு ஒண்ணுமில்லை. மரக்கிளையிலயே ரெண்டு நாள் இருந்துடுவேன். பையன்தான் நச்சரிக்கிறான். அதுக்காகத்தான் வீடு பார்த்துக்கிட்டிருக்கேன். ‘அவனைத் தெரியும். இவனைத் தெரியும்னு சொல்றீங்க. சொந்தமா ஒரு வீடுகூட வாங்க முடியலையே’ன்னு வீட்ல திட்டறாங்க’’ என்று சொல்லி வீடு வாங்குவீர்கள்.
துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதங்களும், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்களும் அடங்கும். முதலில் சித்திரை நட்சத்திரத்தைப் பார்ப்போம். மண்ணின் மைந்தரான செவ்வாய்தான் உங்களை ஆள்கிறார். மேலும், உங்கள் ராசியாதிபதியான சுக்கிரன் கட்டிடகாரகனாக இருப்பதால், வீடு பற்றிய கவலையை விடுங்கள். வீட்டில் எத்தனை ஜன்னல் வைக்கமுடியுமோ அத்தனை வைத்து கட்டுவீர்கள். ஒரு வீட்டோடு திருப்தியடைய மாட்டீர்கள். 25 முதல் 40 வயது வரை குரு தசை நடைபெறும். உங்களின் ராசிநாதனான சுக்கிரனுக்கு பகைவராக குரு இருந்தாலும், உங்கள் நட்சத்திர நாயகனான செவ்வாய்க்கு குரு நட்பாக இருப்பதால் விரைவாக வீடு கட்டுவீர்கள். பூர்வீகச் சொத்துகளை விற்றாலும், திரும்ப வாங்கும் அளவுக்கு வளம் கொழிக்கும்.
தரை தளம் மட்டுமில்லாமல் எல்லா தளங்களுமே உங்களுக்கு ஏற்றது. தனி வீடாக அமைந்தால் ராஜ யோகம் கிட்டும். தென்கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. ராணுவக் குடியிருப்பு, தீயணைப்பு அலுவலகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் போன்ற இடங்களுக்கு அருகில் வீடோ, அபார்ட்மென்ட்டோ கிடைத்தால் நல்லது. மணல், செம்மண், கூழாங்கற்களோடு கூடிய மண்ணாக இருந்தால் உங்களுக்கு ராசியாக இருக்கும். காடு, மலையை அழித்து வரும் எக்ஸ்டென்ஷன் ஏரியாவில் வீடு கிடைத்தால் உடனே வாங்குங்கள். ஜன்னலைத் திறந்தால் குன்றோ, மலையோ தெரிந்தால் உங்களின் வளர்ச்சியும் மலைக்கும்படி இருக்கும். அஸ்வினி, ரோகிணி, பூசம், அனுஷம், திருவோணம், மூலம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள்.
துலாம் ராசியிலேயே சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குத்தான் ஆடம்பரமான வீடுகள் பிடிக்கும். ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சந்து குத்து, தெருக் குத்து வீடுகளெல்லாம்கூட பரவாயில்லை என்று வாங்கி விடுங்கள். முற்றத்தோடு வீடு இருந்தாலும் ரிமோட் கன்ட்ரோல் வைத்த கதவு வேண்டும் என்பீர்கள். பழமையும் புதுமையும் கலந்த கலவை நீங்கள். வெள்ளை மண், மணல், செம்மண் இடங்கள் ஏற்றது. விளைநிலம், பூந்தோட்டமாக இருந்தது என்று சொன்னால் அம்மாதிரியான இடங்கள் உங்களுக்கு ராசியானவை. அரசு வங்கிக் கடனைவிட தனியார் வங்கிக் கடன்தான் உங்களுக்கு சீக்கிரமாகக் கிடைக்கும். வீட்டின் தலைவாசலை வடக்கு, மேற்கு திசையை நோக்கி வைத்துக் கட்டுங்கள். நீங்கள் வசிக்கும் நகரின் இதே திசையில் மனை கிடைத்தால் வாங்கிப் போடுங்கள். அடுக்குமாடியில் உங்களுக்கு எந்த மாடியில் வேண்டுமானாலும் வீடு இருக்கலாம். 27,39,42 வயதுகளில் சொந்த வீடு கட்டுவீர்கள். கேரள மாநில வீடுகள் போல நேர்த்தியாகக் கட்டுவீர்கள்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் வாங்கியதை விற்க மாட்டீர்கள். நகைகளைவிட இடத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவீர்கள். ஏழரை சனி நடக்கும்போது தைரியமாக வீடு வாங்கிப் போடுங்கள். இல்லையெனில் வேறு ஏதேனும் வீண் செலவுகள் வரலாம். சினிமா தியேட்டர், கடைகள் நிறைந்த பகுதி, அரிசி மண்டி, வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் இருந்தாலும் வாங்கிப் போடுங்கள். அடுத்தடுத்து விருத்தியாகும். வங்கிக்கு அருகே வீடு வேண்டாம். டியூஷன் சென்டர், மருத்துவமனை அருகே இருந்தால்கூட தவிர்ப்பது நல்லது. நீங்கள் சொத்து வாங்கும்போது வழிவழியாக சொத்துக்கு பாத்தியப்பட்டவர்கள் யார் என்று தெரிந்து கையெழுத்திடுங்கள். பத்திரப்பதிவையும், புதுமனை புகுவிழாவையும் புனர்பூசம், திருவோணம், அவிட்டம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
விசாகம் 1,2,3 பாதங்களும் இந்த ராசியில் அடங்கும். உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு எதிர்மறை கதிர்வீச்சுக் கோளான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்களை நீங்களே வருத்திக் கொண்டு வீடு வாங்க வேண்டுமா என்று யோசிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் வற்புறுத்தலின் பேரில்தான் வீட்டுக் கடன் வாங்கவே சம்மதிப்பீர்கள். பெரும்பாலான விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டைப் பற்றிய கனவுகள் வந்தாலும், தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வீர்கள். ‘‘வீட்டுக்குன்னு சேர்த்து சேர்த்து, வேற ஏதேதோ செலவுக்குன்னுதான் போகுது’’ என்று புலம்புவீர்கள். ஆனால், எப்பாடுபட்டாவது வாங்கிவிட்டால் அடுத்தடுத்து வாங்கும் யோகம் வரும்.
வீட்டை பிள்ளைகள் அல்லது வாழ்க்கைத்துணையின் பெயரில் வாங்குங்கள். வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசையை நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. 28,32,33 வயதில் வீடு கட்டுவீர்கள். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ, அந்த ஊரின் வடக்கு, வடகிழக்கு திசையிலேயே வீட்டை வாங்கிப் போடுங்கள். பள்ளி, கோயில், வங்கி அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. மூன்று வகையான மண் உள்ள பூமி அமையும். மேல் மண் மணல் போல இருந்து பாறை இருக்கும் பூமியாகக்கூட இருக்கலாம்; விட்டு விடாதீர்கள். பெரும்பாலும் மொட்டை மாடி வருகிற தளத்திற்கு அருகில்தான் வசிக்க விரும்புவீர்கள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, உத்திரம், சித்திரை, சுவாதி போன்ற நட்சத்திர நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
துலாம் ராசிக்காரரான உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் சனி பகவானே ஆவார். அதிலும் உங்கள் துலாம் ராசியிலிருந்து நான்காம் இடமான மகரச் சனியே வீட்டு யோகத்தை தீர்மானிக்கிறார். சனிக்கும் கடலுக்கும் சம்பந்தமுண்டு. அதேபோல, சனிக்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தொடர்பு உண்டு. முன்னோர்கள், பிதுர் கடன் தீர்ப்பவர் என்று பல விஷயங்களை தன்னிடத்தில் கொண்டுள்ளார் சனி. அதில் ஏதேனும் நிறைவேற்றப்படாமல் இருந்தால்கூட உங்களின் வீடு கட்டும் ஆசை நிறைவேறாமல் போகக் கூடும். அதிலும் சாதாரண மனிதருக்கு இறைவனே சிரார்த்தம் செய்த தலமெனில் அதற்கு இன்னும் சிறப்பு உண்டு. அப்படிப்பட்ட தலமான கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசித்து வாருங்கள். திருமழிசை ஆழ்வாருக்காக எழுந்தும் எழாமலும் சற்றே தலையை மேலே தூக்கி சேவை சாதிக்கிறார். வைகுண்டத்திலிருந்து தேரில் இறங்கிய பெருமாள் ஆதலால் கோயிலே தேரின் அமைப்போடு உள்ளது. எனவே, பூலோக வைகுண்டமாம் கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசிக்க, உங்கள் இல்லக் கனவும் நனவாகும்.