தாம்பரம்: மாதவரம் மூலக்கடையில் தனியாருக்கு சொந்தமான வெளிநாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் கன்டெய்னர் முனையம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்கு சுமார் 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கன்டெய்னர் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருப்பதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் கண்டார்.
இது தொடர்பாக உடனடியாக செம்பியம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் தீயணைப்புத்துறை எப்.எஸ்.சி பரமேஸ்வரன் தலைமையிலான வீரர்கள், உடனடியாக அந்த பாம்பினை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பாம்பு போக்கு காட்டியபடி இருந்ததால் அதனை லாவகமாக பிடிக்க, பாம்பு பிடி கருவி கொண்டுவரப்பட்டு, அந்த கருவி மூலம் அந்த மலைப்பாம்பை பிடித்து, கிண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பிடிப்பட்ட மலைப்பாம்பை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், இது நமது நாட்டு மலைப்பாம்பு கிடையாது. வெளிநாட்டில் வாழும் ஒரு வகையான அரிய வகை மலைப்பாம்பு. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கன்டெய்னர் பெட்டிக்குள் இந்த மலை பாம்பு ஊடுருவி வந்திருக்கலாம். இந்த மலைப்பாம்பு அடர்ந்த காட்டுக்குள் விடப்படும் என்றனர்.