மும்பை: விமானிகளுக்கான பணி நேர வரம்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 முக்கிய அதிகாரிகளை பணிநீக்க செய்ய உத்தரவிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விதிமீறல்கள் தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் விடுத்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த 30 விநாடிகளில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள், 2 விமானிகள், விமான பணியாளர்கள் என விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 274 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானிகளுக்கான அதிகபட்ச பணி நேரத்தை விட கூடுதல் நேரம் பணி செய்ய வைத்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஏர் இந்தியா நிறுவனம் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செயல்பாட்டு நிர்வாக தரவுகளை ஆய்வு செய்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவின் செயல்பாட்டில் பல முக்கிய விதிமீறல்கள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.
இந்த செயல்பாட்டு குறைபாடுகளுக்கு நேரடியாக பொறுப்பான டிவிஷனல் துணைத் தலைவர் உட்பட 3 உயர் அதிகாரிகள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதை செய்யத் தவறினால், ஏர் இந்தியாவின் செயல்பாட்டு உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நேரடி ஆய்வின் போதும் விமானிகளுக்கான பணி நேர வரம்பு விதிமுறைகளை ஏர் இந்தியா மீறியது கண்டறியப்பட்டதாகவும் டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ‘நேரடி சோதனையின் போது ஏர் இந்தியாவின் பொறுப்பு மேலாளர் கடந்த மே 16 மற்றும் 17ம் தேதிகளில் பெங்களூருவிலிருந்து லண்டனுக்கு 2 விமானங்களை இயக்கியது கவனிக்கப்பட்டது. இவை இரண்டும் நிர்ணயிக்கப்பட்ட விமான நேர வரம்பான 10 மணி நேரத்தை தாண்டியது’ என கூறப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 7 நாளில் ஏர் இந்தியா விளக்கம் அளிக்கவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
3 ஆண்டுக்கு பின் கடும் நெருக்கடி
கடந்த 2022ல் அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கிய பிறகு தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அகமதாபாத் விபத்தை தொடர்ந்து சமீப நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் அதன் முன்பதிவு வெகுவாக சரிந்திருக்கும் நிலையில், டிஜிசிஏவின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகள் ஏர் இந்தியாவின் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
8 பேர் குடும்பத்திடம் 2வது முறையாக டிஎன்ஏ சேகரிப்பு
விமான விபத்தில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்தினரிடம் 2வது முறையாக டிஎன்ஏ மாதிரி வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே கொடுத்த முதல் டிஎன்ஏ மாதிரியுடன் இறந்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தவில்லை. இதனை தொடர்ந்து அதே குடும்பத்தை சேர்ந்த வேறு நபர்களின் டிஎன்ஏ மாதிரியை வழங்கும்படி குறிப்பிட்ட 8 பேர் குடும்பத்தினரிடம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படத் தயாரிப்பாளர் பலி உறுதி
குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி முதல் குஜராத்தி திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ஜிராவாலா(34) மாயாமானார். இந்நிலையில் ட்ரீம் லைனர் விமான விபத்து நிகழ்ந்த மெக்ஹானிநகர் பகுதியை கடந்து சென்றபோது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் இருந்து கருகிய நிலையில் மகேஷ் பைக் மீட்கப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரி பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் மகேஷ் உடல் அடையாளம் காணப்பட்டது.
247 சடலங்கள் கண்டுபிடிப்பு
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை மொத்தம் 247 பேர் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 232 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்ட 247 பேரில் 187 இந்தியர்கள், 52 பிரிட்டன் நாட்டவர்கள், ஏழு போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.
60 நாட்களில் தடைகளை அகற்ற உத்தரவு
அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, இந்திய விமான நிலைய ஆணையம் விமான பாதைகளில் உள்ள தடைகளை 60 நாட்களில் அகற்ற உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தின் அருகே உள்ள தடைகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வருகிறது.