*ஜமாபந்தியில் கோட்டாட்சியர் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவும் கூட்டு பட்டா பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனஊட்டியில் நடந்த ஜமாபந்தியில் கோட்டாட்சியர் நம்பிக்கை தெரிவித்தார்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் பசலி 1434க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று துவங்கியது.
ஊட்டி வட்டத்திற்கான ஜமாபந்தி ஊட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.வட்டாட்சியர் சங்கர் கணேஷ் வரவேற்றார். வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பங்கேற்று 18 பேருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன. முதியோர் உதவித்தொகை கோரி பலரும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கின்றனர்.
அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு துறைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் கூட்டு பட்டா பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணுவதற்கான முதல்படியை எடுத்து வைத்துள்ளோம். வெற்றி பெற்றால் நீண்ட காலமாக நிலவும் கூட்டு பட்டா பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க தடை உள்ளது. இதனால் பட்டா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடிவதில்லை. நீண்ட காலத்திற்கு பின் விலக்கு பெற்று பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் வறுமை கோட்டத்திற்கு கீழ் உள்ள அரசு நிலங்களில் குடியிருப்போருக்கும் பட்டா வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மூலம் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்கும் பட்சத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க கூடிய வாய்ப்புள்ளது, என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தூனேரி உள் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை ேசர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். மொத்தம் 286 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து உடனடியாக தீர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
முன்னதாக நில அளவை துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் ஊட்டி வட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துைற சார்ந்த பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இன்றும், நாளையும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது.