புதுடெல்லி: லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணை அறைக்குள் புகுந்த மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏர் இந்தியாவின் விமான பணிப்பெண் ஒருவர் கடந்த வாரம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர் அறையில் புகுந்து பணிப்பெண்ணை தாக்கியுள்ளார்.
அவர் சத்தம் போட்டதையடுத்து அருகில் உள்ள அறைகளில் தங்கியிருந்த ஏர் இந்தியாவின் இதர விமானங்களின் ஊழியர்கள் அவரை காப்பாற்றினர். அந்த நபர் தாக்கியதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. பணிப்பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான பணிபெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடந்துள்ளது என்று வேறொரு தகவல் தெரிவித்தது.ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிறுவனம் தனது பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.சட்டவிரோதமாக ஓட்டல் அறைக்குள் மர்மநபர் புகுந்ததால் மிக வேதனையடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட ஊழியருக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக ஓட்டல் நிர்வாகத்துடன் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளது.