சென்னை: சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று வழக்கம் போல் அதிகாலை 5.35 மணியளவில் 247 பயணிகள் மற்றும் 15 ஊழியர்கள் என மொத்தம் 262 பேருடன் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கடல் பகுதி வழியாக சென்றபோது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை துவக்கியதால், மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லை மூடப்பட்டதாக விமானிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து லண்டன் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த விமானத்தை மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் லண்டனுக்கு 262 பேருடன் புறப்பட்டு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து 247 பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை 11 மணியளவில் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லை மீண்டும் திறக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காலை 11.50 மணியளவில் 262 பேருடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனுக்குப் புறப்பட்டு சென்றது.