சென்னை: லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் சென்றது. சென்னை – லண்டன் – சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் உடனடியாக மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் சென்று பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் இருந்து லண்டன் மற்றும் லண்டனில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
இதனால் அந்த விமானங்களில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். 274 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கு பின்னர்,விமானங்களின் இயந்திரங்கள் தொடர்ச்சியாக 2 அல்லது 3 முறை சரிபார்க்கப்படுவதாகவும் சிறு பாதிப்பு இருந்தாலும், அதனை முழுமையாக சரி செய்த பின்னரே விமானங்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. 274 பேர் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்து தொடர்பாகஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. விசாரணையை 3 மாதங்களில் முடித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க உள்ளது இந்த குழு.