லண்டன்: 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார் ஒரு ஓவியர். ஹாலிவுட் பிரபலங்களே இவருக்கு ரசிகர்களாக இருந்தும் தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் காட்டாத ஓவியர் யார் தெரியுமா?. தெருக்களில் ஆங்காங்கே திடீரென தோன்றும் ஓவியங்கள். அதன்முன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மக்கள் என கடந்த ஒரு மாதமாகவே லண்டன் தெருக்கள் பரபரப்பாக இருக்கின்றன. இரவு வரை எதுவும் இல்லாத சுவர்களை மறுநாள் இந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஆள் இல்லாத நேரங்களில் ஓவியத்தை வரைவது பேங்ஸி ஓவியர் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் யார்? அவர் கருப்பா? சிவப்பா? என எதுவும் தெரியாது. உலகமே இவரது முகத்தை பார்க்கமாட்டோமா என ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் லண்டன் வாசிகளுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் ரகசிய ஓவியர் பேங்ஸி. 1990களின் இறுதியில் ஸ்பிரே ஓவியங்களை வரைந்து கவனம் ஈர்த்த பேங்ஸி, கிராஃப்டி பாணியில் ஓவியங்களை வரைந்து வருகிறார். அரசியல் நயாண்டி, பாசிசம், முதலாளித்துவ எதிர்ப்பு, காலநிலை மாற்றம் போன்றவை மீதான விமர்சனங்கள் இவரது ஓவியங்களில் தெறிக்கும். தன்னுடைய படைப்புகளை இன்ஸ்டா, யூ டியூப் தளங்களில் பதிவேற்றம் செய்து வரும் பேங்ஸி, இன்று வரை தன்னுடைய அடையாளத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை.