ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் மக்களின் அதிருப்தியை தணிப்பதற்காக ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்களை சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமை களமிறக்கி வருகிறது. மத்திய பிரதேச பார்முலாவை போல் ராஜஸ்தானிலும் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் நவம்பர், டிசம்பரில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டி, ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்களை தங்களது கட்சியின் வேட்பாளர்களாக பாஜக தலைமை அறிவித்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில் எம்பிக்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளதால், அவர்களை சட்டசபை தேர்தல்களில் பாஜக களம் இறக்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் பார்முலாவை ராஜஸ்தானிலும் பாஜக தலைமை செயல்படுத்த உள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில், ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தேர்தலில் போட்டியிட வைக்க வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் சவுத்ரிக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி போட்டியிட வைக்க வாய்ப்புள்ளதாகவும், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 எம்பிக்களில் 24 எம்பிக்கள் பாஜக வசம் உள்ளதால் அவர்களில் பெரும்பாலானோர் சட்டசபையில் களம் இறக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருவது போன்று, ராஜஸ்தானிலும் அடுத்த சில நாட்களில் பாஜக தலைமை வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மாலை ஜெய்ப்பூர் வருகின்றனர். அவர்கள் இன்றிரவு 8 மணிக்கு பாஜக தலைமையகத்தில் நடக்கும் தேர்தல் பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் நாளை காலை இரு தலைவர்களும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்கின்றனர். நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்த பிரகாஷ் சந்துக்கு, வரும் தேர்தலில் பெரிய பொறுப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே ராஜஸ்தான் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.