அகமதாபாத்: இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டும்தான். எனவே காங்கிரசுடன் ஆம்ஆத்மி கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் நடந்த விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மாநில தலைவர் கோபால் இத்தாலியா 17 ஆயிரம் ஓட்டு அதிகம் பெற்று பா.ஜ வேட்பாளர் கிரித்படேலை வீழ்த்தினார். காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பாரியா 5,501 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளர் தனித்து நின்று வெற்றி பெற்றதால் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அங்கு சென்ற டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும். குஜராத் மக்களுக்கு இப்போது பாஜ மற்றும் காங்கிரஸ் தவிர ஆம்ஆத்மியும் உள்ளது. நாங்கள் காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை. கூட்டணி இருந்தால், அவர்கள் ஏன் விசாவதாரில் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்கள்? அவர்கள் எங்களை தோற்கடிக்க வந்தார்கள். எங்கள் வாக்குகளை குறைத்து ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க பாஜ காங்கிரஸை அனுப்பியது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இதனால் காங்கிரசை பா.ஜ கண்டித்துள்ளது.
இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே. இப்போது எங்கள் தரப்பில் எந்த கூட்டணியும் இல்லை. பாஜ தனது 30 ஆண்டுகால ஆட்சியில் குஜராத்தை நாசமாக்கிவிட்டது. பாஜ ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவதால், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி ஒரு வலுவான மாற்றாக உருவெடுத்துள்ளது. 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை ஆண்டுகளுக்கு வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வோம். ஆம் ஆத்மி கட்சி இளைஞர்களின் கட்சி. ஊழல் இல்லாத குஜராத்தை விரும்பும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் எங்களுடன் இணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.