Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லோக்சபா தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்துள்ள நிலையில் டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் போராட்டம்

*எல்லைகள் அடைக்கப்பட்டதால் பஸ், ரயில், விமானத்தில் பயணம் ஜந்தர் மந்தரை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்துள்ள நிலையில், டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லி எல்லைகள் அடைக்கப்பட்டதால் பஸ், ரயில், விமானம் மூலம் சென்று ஜந்தர் மந்தரில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இவற்றை நிறைவேற்றக் கோரி, கடந்த மாதம் 13ம் தேதி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஆனால் அரியானா மற்றும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு விவசாயிகள் மீது ேபாலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டாம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானவுரி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தான், விவசாயிகளின் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இரண்டு முக்கிய அமைப்புகளான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ‘மார்ச் 6ம் தேதி டெல்லிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் வரும் 10ம் தேதி 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை இன்று விவசாயிகள் முன்னெடுத்தனர். பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் பங்கேற்றன.

விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு, திக்ரி, சிங்கு, காஜிப்பூர் எல்லைகளில் டெல்லி காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய எல்லைகளில் தடுப்புகள், முள்வேலி போன்றவற்றை அமைத்து, வெளிமாநில விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் டெல்லியை அடைய முடியாத விவசாயிகள், ரயில், பேருந்து, விமானம் உட்பட அனைத்து வழிகளிலும் இருந்து டெல்லிக்கு சென்றனர். அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த எவருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்பதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.