கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தி-நகரில் உள்ள பாண்டிபஜாரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2ம் நாளான இன்று வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு ஆதரவு திரட்டினார்.
இதை தொடர்ந்து, கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் வந்தார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கோவையில் இருந்து பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் வருகை தந்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார். மோடி, மோடி என கோஷம் எழுப்பி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார்.
கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆவர். ஊழல் பெருச்சாலிகளை அலற வைத்தவரே, சமூகநீதி காவலரே வருக வருக என பிரதமர் மோடிக்கு எல்.முருகன் வரவேற்பு அளித்தார். நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் பிரதமர் ஒருவர் மேட்டுபாளையம் பகுதிக்கு வருவது இதுவே முதல்முறை. உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி. தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவும் காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.