புதுடெல்லி: வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு இன்று அறிமுகப்படுத்துகிறது. தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.
திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
* ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது.
* வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
* ஒன்றிய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் அமைப்புக்களில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை மசோதா உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
* போஹாராக்கள் மற்றும் அக்கானிகளுக்கு தனியாக அவுகாப் வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிவதாக தெரிகிறது. ஷியாக்கள், சன்னி, போஹ்ராக்கள், அக்கானிகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை இந்த திருத்த மசோதா வழங்குகிறது.
* ஒன்றிய அரசின் போர்டல் மற்றும் தரவுதளத்தின் மூலமாக வக்பு வாரியங்களை பதிவு செய்யும் முறையை நெறிப்படுத்துவதும் இதன் நோக்கங்களின் ஒன்றாகும். வக்பு வாரிய சட்டம் முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியரின் உரிமைகளை பறிப்பதற்கு பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும், இந்துக்கள்-இஸ்லாமியர்களை பிரிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பரவலாக இஸ்லாமிய சமூகத்தினரிடையே வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்
மக்களவையில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அதனை ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் கூட்டத்தில் அரசு விவாதிக்கும்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார். இதனிடையே மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்காது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.