டெல்லி: மக்களவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை பற்றி பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்பதற்காக I.N.D.I.A எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நேற்று இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
மணிப்பூர் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய பாஜக அரசு தவறிவிட்டதை கடுமையாக கண்டித்து ராகுல் காந்தி பேசினார். மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் பிரதமர் மவுனம் காப்பதாகவும் அவரை தேசத்துரோகி என்றும் ராகுல் விமர்சித்திருந்தார். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாகவும் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ராகுல் பேச்சில் இருந்து 24 வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி உரையில் கொலை என்று குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியுள்ளார். மக்களவை சபாநாயகரை குறிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியவற்றையும் அவைக்குறிப்பில் இருந்து அவர் நீக்கிவிட்டார்.