புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பொய் தகவல்களை கூறி, அவதூறு பிரசாரம் செய்ததற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரமதர் மோடியை அழைக்க வேண்டுமென வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக அமெரிக்காவிடம் இந்தியா கெஞ்சியதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் மறுத்துள்ளனர். இந்நிலையில், பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ராகுல் காந்தி உண்மைக்கு மாறான தகவல்களை நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அதோடு அவர் உண்மைகளை திரித்து நாட்டின் மதிப்பையும் கெடுத்துள்ளார். இதனால் நாடாளுமன்றத்தின் நடைமுறைகளையும், விதிகளையும் மீறியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.
* பொறுப்பற்ற அரசியல்
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ராணுவத் தளபதி கூறியது என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி கூறிய வார்த்தைகளை அவர் எந்த நேரத்திலும் பேசியதில்லை. தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. நாட்டின் வரலாறு சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என கூறி உள்ளார்.