ஸ்ரீநகர்: மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் உடல்மொழி, நம்பிக்கை அடியோடு மாறிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு சென்றனர்.
ஸ்ரீநகரில் ராஜபாக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், 10 மாவட்ட தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதன்பிறகு ராகுல்காந்தி கூறியதாவது: காங்கிரஸ் கட்சியும், அதன் தொண்டர்களும் பிரதமர் மோடியின் நம்பிக்கையை அசைத்துவிட்டனர். தேர்தலுக்கு முன் அவர் வெளிப்படுத்திய தன்னம்பிக்கையான உடல்மொழியை இழந்துவிட்டார். காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு மனரீதியாக மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் அவரை அரசியல் சாசனத்தின் முன் தலைவணங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இப்போது இருக்கும் பிரதமர் மோடி,தேர்தலுக்கு முன்பு இருந்த அதே பிரதமர் அல்ல. காஷ்மீர் மக்களுடனான எனது உறவு அரசியல் தொடர்பு அல்ல. இது அன்பின் உறவு. எனது குடும்பம் உங்கள் மாநிலத்தில் இருந்து வந்தது. எனவே, டெல்லியில் உங்களுக்கு ஒரு சிப்பாய் இருப்பதை நீங்கள் எப்போதும் உணர வேண்டும். நான் உங்கள் சிப்பாய். உங்களுக்கு என்ன தேவையோ, என் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் எனக்கு ஒரு உத்தரவை மட்டுமே கொடுக்க வேண்டும், நான் உங்கள் முன் இருப்பேன் . இவ்வாறு அவர் பேசினார்.
* 90 தொகுதிகளிலும் காங். உடன் கூட்டணி
காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் துணை தலைவர் உமர் அப்துல்லாவை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடப்படும்” என்றார்.