Sunday, February 25, 2024
Home » லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளரா?.. தொகுதி பங்கீடு குறித்து தலைவர்கள் தீவிர ஆலோசனை

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளரா?.. தொகுதி பங்கீடு குறித்து தலைவர்கள் தீவிர ஆலோசனை

by MuthuKumar

புதுடெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தல், தொகுதிப் பங்கீடு குறித்து தலைவர்கள் இன்று தீவிர ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை, டெல்லி என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதே வேளையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நான்கு கட்டங்களாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரசின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு, தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளது. அந்த வகையில், 42 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில், தொகுதி பங்கீடு செய்வது குறித்து திரிணாமுல் காங்கிரசுக்கு, காங்கிரஸ் குழு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துவிட்டது. இவ்விசயத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜியை நேரடியாக சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் ‘இந்­தியா’ கூட்­டணி கட்­சி­யி­ன­ரின் ஆலோ­சனை கூட்­டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ இம்பாலில் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்வது குறித்தும் பேசப்பட்டது’ என்றனர்.

நாளை முதல் ராகுல் யாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். மணிப்பூரின் இம்பாலில் நாளை யாத்திரை தொடங்கி, வரும் மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிகிறது. 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டப்பேரவை தொகுதிகள் வழியாக 66 நாட்களில் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் தொடக்க விழா, கிழக்கு இம்பாலில் உள்ள ஹட்டா காங்ஜெய்புங் அரண்மனை மைதானத்தில் நடத்த சில நிபந்தனைகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தொடக்க விழாவில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

nine + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi