சென்னை: மக்களவைத் தேர்தலில் பர்கலா பிரபாகர் எழுப்பிய சந்தேகங்கள் குறித்து அஞ்சலட்டைகள் குவியட்டும் என திராவிட கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 8.8.2024 அன்று ‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு‘ என்ற அமைப்பின் சார்பில், ‘திருடப்பட்ட தீர்ப்பு‘ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில், பிரபல பொருளாதார ஆய்வாளரும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்பும், விழுமியங்களும் காப்பாற்றப்படவேண்டும்; இந்தியா ஜனநாயகக் குடியரசாக உண்மையிலேயே திகழவேண்டும் என்பதில் தீராத கவலையும், ஆர்வமும் கொண்ட அரசியல் ஆர்வலருமான பர்கலா பிரபாகர் அவர்கள் சில முக்கியமான சந்தேகங்களையும், அதையொட்டிய கேள்விகளையும் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள்பற்றி எழுப்பியுள்ளார்! (அவர் இந்திய ஒன்றிய அரசில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது கூடுதல் தகவல்).
இரண்டாம் கட்டத் தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?
1. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான ஓட்டுக்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை; சதவிகிதமாகத்தான் வெளியிட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின், 11 நாள்கள் கழித்தே, அதன் விவரங்களை வெளியிட்டது.இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் தற்போதுவரை வரவில்லை.
2. தேர்தலுக்குமுன் சிறப்பாக பிரச்சாரம் செய்யக்கூடிய இரண்டு முதலமைச்சர்களைக் கைது செய்தனர்.
3. முக்கிய எதிர்க்கட்சியின் (காங்கிரஸ் கட்சி) வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தபின், தேர்தல் நியாயமாக நடந்ததாக தேர்தல் ஆணையம் சொல்கிறது!
4. ஓட்டுப்பதிவு நடந்த அன்று காலை 7 மணிமுதல் 8.45 மணிக்குள் குறிப்பிட்ட 79 தொகுதிகளில் 4.60 கோடி ஓட்டுக்கள் பதிவான அதிசயம் இந்தத் தேர்தலில் நடந்துள்ளது! அந்தத் தொகுதிகள்தான் பா.ஜ.க. வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன. இத்தனைக்கும்பின் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது என்று கூறும்போது சந்தேகம் வருகின்றது!
5. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, 39 தொகுதிகளில் (புதுச்சேரியையும் சேர்த்தால் 40) தேர்தல் நடந்ததில், பா.ஜ.க.வுக்கு ஓட்டு விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டைவிட குறைந்த தொகுதிகள் உடைய ராஜஸ்தான், கருநாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், இரண்டு கட்டம், நான்கு கட்டம் எனத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது! இது ஏன் என்பதுதான் கேள்வி! தொகுதி எண்ணிக்கை குறைவான மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்திய மர்மம் என்ன?
6. தொகுதிகள் குறைந்த இடங்களை உடைய மாநிலங்களில், பல கட்டங்களாக தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் என்னவென்பதை தேர்தல் ஆணையம் நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்.
7. இரண்டாம் கட்டத் தேர்தலில் 88 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்தது. அதில் பதிவான ஓட்டுகள் விவரங்களை தற்போதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.ஆனால், இரண்டாம் கட்டத்தில் நடந்த தேர்தலில்தான், அதிக தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது! இதுதான் கட்சிகளுக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் குரல் எழுப்பவேண்டும். குடியரசுத் தலைவருக்கும் – தேர்தல் ஆணையத்திற்கும் அஞ்சலட்டைகள் குவியட்டும்! இந்த மாதிரியான தேர்தல் சந்தேகம் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, குடியரசுத் தலைவருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைக்கவேண்டும். குடியரசுத் தலைவர் மாளிகை அஞ்சல் அட்டைகளால் நிரம்பி வழியவேண்டும்.
இதே கருத்தை விளக்கிக் கடந்த 7.8.2024 அன்று வெளியான ‘முரசொலி‘ நாளேட்டின் தலையங்கம் ‘திருடப்பட்ட வெற்றிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அதை இன்றைய ‘விடுதலை‘யின் 2 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். மக்கள் மத்தியில் தேர்தலில் நடைபெற்ற அவலங்களை பல வழிகளிலும் கொண்டு செல்லவேண்டும்! இந்தியா கூட்டணிக் கட்சிகளும், ஜனநாயகக் காப்பில் ஆர்வம் உள்ளவர்களும், முற்போக்காளர்களும், பொது மனிதர்களும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட ஆளும் மைனாரிட்டி பா.ஜ.க. கூட்டணி தவிர, அனைத்துக்கட்சிகளும் மக்கள் மன்றத்தில் இதுபற்றி பொது விவாத மேடைகளிலும், தத்தம் மேடைகளிலும் பரப்புரை செய்ய முன்வரவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். புரட்டும், பொல்லாங்கும் பொசுங்கும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.