வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பல் டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2023ம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். அதில், சுகாதாரமற்ற கருவியை தொடர்ந்து பிற நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் அவர்களுக்கு மூளையை தாக்கும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு 8 பேர் இறந்த விவரம் தெரியவந்தது.தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி கடந்த 30ம் தேதி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, 8 பேர் இறந்த மருத்துவமனையின் பெயரை புதிய பெயரில் மாற்றி டாக்டர் தொடர்ந்து இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையின் ஆவணங்கள் மற்றும் இதுவரை சிகிச்சை பெற்ற நபர்களின் விவரங்களை விளக்க அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அந்த மருத்துவமனை சார்பில் விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனை அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவக்குழுவினர் மற்றும் வாணியம்பாடி தாசில்தார் உமா ரம்யா தலைமையிலான வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கி சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டனர்.