கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடும் வன்முறை வெடித்தது. பல இடங்களில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வீச்சு என கடுமையான வன்முறை சம்பவங்கள் நடந்தன. குண்டர்களால் வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றப்பட்டு கள்ள ஓட்டுகள் போடப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை வெறியாட்டத்தில், பல்வேறு கட்சியை சேர்ந்த 14 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 22 மாவட்டங்களில் 73,887 தொகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதாலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியதாலும் கடுமையான போட்டி நிலவியது. இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதன் காரணமாக, தேர்தல் பாதுகாப்பு பணியில் 600 கம்பெனி (சுமார் 60 ஆயிரம் வீரர்கள்) துணை ராணுவமும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வன்முறை சம்பவங்கள் உச்ச கட்டத்தை எட்டின. கூச் பெகர் மாவட்டத்தில் உள்ள பாலிமாரி கிராம பஞ்சாயத்தில் பாஜ பூத் ஏஜென்ட் மதாப் பிஸ்வாஸ் வாக்குச்சாவடி மையத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற போது, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகவும் பாஜ குற்றம்சாட்டியது. இதனை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது.
இதே போல, கூச் பெகரில் உள்ள துபாங்கஞ்ச் 2 பஞ்சாயத்து சமிதியில் பாஜவினரின் தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் ஏஜென்ட் கணேஷ் சர்க்கார் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மால்டா மாவட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் நடந்த மோதலில் திரிணாமுல் காங்கிஸ் கட்சி தலைவரின் சகோதரரான மாலேக் ஷேக் என்பவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஹரிங்கட்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரசார் மீது கையெறி குண்டுகளை வீசிய போது, அது கை தவறி வெடித்ததில் ஐஎஸ்எப் கட்சியின் சைதுல் ஷேக் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் சைதுல் ஷேக் இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபோல, பல மாவட்டங்களில் ஆளுங்கட்சியுடன் பிற கட்சியினர் கடுமையான மோதலில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடி மையங்கள் போர்க்களமாக மாறின.
இதுதவிர சில இடங்களில் கட்சி தொண்டர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகி பீதியை ஏற்படுத்தியது. துப்பாக்கி குண்டு காயங்களுடன் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாக்குப்பெட்டிகளை எரித்து வாக்காளர்களை மிரட்டிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கூச்பெகர் மாவட்டத்தின் தின்ஹாட்டாவில், அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சாவடியில் வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டு, வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டது. பர்னாச்சினா பகுதியில் உள்ள மற்றொரு சாவடியில், கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறி வாக்குச் சீட்டுகளுடன் கூடிய வாக்குப்பெட்டியை உள்ளூர் மக்கள் எரித்தனர். பல இடங்களில் குண்டர்களை வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்றி இஷ்டத்திற்கு கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இதுபோன்ற கலவரங்களால் பரபரப்பும் பீதியுடனும் தேர்தல் நடந்தது. நேற்று மாலை நிலவரப்படி, தேர்தல் வன்முறையில் 14 பேர் கொல்லப்பட்டனர். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 8 பேரும், பாஜ, காங்கிரஸ் மார்க்சிஸ்ட் மற்றும் ஐஎஸ்எப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் வன்முறையில் பலியாகி உள்ளனர். தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சில இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு கோரி பொதுமக்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முழுவதும் மேற்கு வங்கத்தில் அசாதாரண சூழல் நிலவியது. உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 14 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
* மத்திய படையினர் மீது திரிணாமுல் குற்றச்சாட்டு
தேர்தல் வன்முறைக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மாநில அமைச்சர் சஷி பஞ்சா கூறுகையில், ‘‘பாஜ, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஒன்றிணைந்து கலவரத்தை தூண்டி உள்ளன. நாங்கள் தான் வன்முறை செய்தோம் என்றால், ஏன் எங்கள் கட்சிக்காரர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்? இந்த விஷயத்தில் மத்திய படையினர் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டனர். மத்திய படையினர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 60ல் மட்டுமே வன்முறை நடந்துள்ளது’’ என்றார். மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். மக்கள் ஆணை சூறையாடப்படுகிறது. வன்முறையான தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் மம்தா’’ என்றார். சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘‘திரிணாமுல் ஆட்சியில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது மாயை. ஜனாதிபதி ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தினால் மட்டுமே அது சாத்தியம்’’ என்றார்.
* வெடிகுண்டை பந்து என நினைத்து எடுத்த சிறுவர்கள் காயம்
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் பான்கோர் கிராமத்தில் தேர்தல் வன்முறைக்கு மத்தியில் சாலையில் கையெறி குண்டு கிடந்துள்ளது. இதனை அந்த கிராமத்தை சேர்ந்த 8 மற்றும் 10 வயதுடைய 2 சிறுவர்கள் பந்து என நினைத்து கையில் எடுத்துள்ளனர். அப்போது திடீரென குண்டு வெடித்து 2 சிறுவர்களும் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தலுக்கான எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என கிராமமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
* களமிறங்கிய ஆளுநர்
தேர்தல் வன்முறைக்கு மத்தியில், மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் நேரடியாக களமிறங்கி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பராசாத் பகுதியில் குண்டுவீச்சில் காயமடைந்த பிரகச்சா என்பவரை மருத்துவமனையில் சென்று ஆளுநர் ஆனந்தா போஸ் சந்தித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், நாடியா மாவட்டத்திற்கு செல்லும் வழியில் பாசுதேப்பூர் பகுதியில் ஆளுநர் காரை வழிமறித்த பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர், சில குண்டர்கள் வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக குற்றம்சாட்டினர். உடனடியாக அங்கிருந்த தேர்தல் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஆளுநர் முயன்றார். ஆனால் போனில் சிக்னல் கிடைக்கவில்லை.
* 66.28 சதவீதம் வாக்கு பதிவு
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் ராஜீவா சின்ஹா நேற்று மாலை அளித்த பேட்டியில், ‘’வடக்கு 24 பர்கனாஸ், தெற்கு 24 பர்கனாஸ், முர்ஷிதாபாத் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் வந்தள்ளன. வாக்குப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட 1,300 புகார்கள் வந்துள்ளது. மேலும் சில இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி நாளை (இன்று) விரிவான ஆய்வு நடத்தி மறு வாக்குப்பதிவு நடத்துவது உட்பட அனைத்து முடிவுகள் எடுக்கப்படும். வாக்குப்பதிவின் போது அதிகாரப்பூர்வமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 மட்டுமே. மாலை 5 மணி நிலவரப்படி 66.28 சதவீத வாக்குகள் பதிவாகின’’ என்றார்.
* எதிர்க்கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், ‘‘மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறது. ஆளும்கட்சி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால், மம்தாவுடன் கூட்டணி வைக்க விரும்புவதால் இதைப் பற்றி ராகுல் காந்தி எதுவும் பேசாமல் இருக்கிறார். இதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பேசுவார்களா? சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு மேற்கு வங்க மக்கள் தகுதியானவர்கள் இல்லையா?’’ என்றார்.
* ஒன்றிய படைக்கு வெறும் ரோந்து பணி
ஒன்றிய அமைச்சர் நிஷித் பிராமணிக் கூறுகையில், ‘‘திரிணாமுல் அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஒன்றிய படையே இல்லாமல் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயன்றது. ஆனால் நீதிமன்றத்தை நாங்கள் அணுகியதால் ஒன்றிய பாதுகாப்பு படை அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு ரோந்து பணி மட்டுமே செய்ய மாநில அரசு நியமித்தது. எந்த வாக்குச்சாவடியிலும் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை’’ என்றார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டுமென பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் எழுதி உள்ளார்.