சென்னை: 2021-ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 19.10.2026-ல் முடிவடைகிறது. பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வருவது தவிர்க்க வேண்டிய ஒன்று. கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழப்பம் அடைய வேண்டாம் என்று கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், பெரிய மாவட்டங்களாக இருந்த வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி என ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மறுசீரமைப்பு காரணமாக, இந்த ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2019 டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன.
அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் குறித்து அரசியல் கட்சியினர் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஊரகமும் நகர்ப்புறமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்டவைதான். கடந்த ஆட்சிக்காலங்களில், இரண்டையும் உள்ளடக்கியே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஊரகம், நகர்ப்புறம் எனப் பிரிக்கப்பட்டதுடன், 27 மாவட்டங்களுக்கும், ஒன்பது மாவட்டங்களுக்கும் தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
2021-ல் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வான பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026-ல் முடிகிறது. டிச. 2024-ல் முடிவதாக தகவல் வெளியாகியுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர் ஆணையத்துக்கு மனு அளித்தனர். 2021-ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 19.10.2026-ல் முடிவடைகிறது. பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வருவது தவிர்க்க வேண்டிய ஒன்று. கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழப்பம் அடைய வேண்டாம் என்று கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது