சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிப்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி, நகராட்சி மன்றத்திற்கு tnurbantree.tn.gov.in/whatsnew இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு tn.gov.in/dtp அல்லது dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வரும் 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.