சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது தான் ஓணம் பண்டிகை. சங்ககால கணிப்புபடி கடவுள் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்த நாளாகவும் ஓணம் பார்க்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சமாக, மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் மலையாள மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போடுவார்கள்.
10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை வெகு சிறப்பான நடைபெறுவது வழக்கம். சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், நாளை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கலெக்டர்அருணா வெளியிட்ட அறிவிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29ம் தேதி(நாளை) சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் அடுத்த மாதம் 2ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான நாளை அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும்.