சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதாவது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுவார்கள். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகள், கிராமப் பஞ்சாயத்து 12,913, ஊராட்சி ஒன்றியம் 388, மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்.