மதுரை: ‘ஏழை மக்களை வங்கிகள் துன்புறுத்தக் கூடாது’ என்று ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த மாரித்துரை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தொழில் செய்வதற்காக தனியார் வங்கியில் 39 லட்சத்து 74 ஆயிரத்து 523 ரூபாய் கடனாக பெற்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முறையாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வங்கியில் அடமானமாக கொடுத்த சொத்தை ஜப்தி செய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியது.
இதனால் நீதிமன்றத்தை நாடியபோது 20.10.2022க்குள் ரூ. 7 லட்சம், பின்பு மீத தொகையை 4 தவணைகளாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 16.2.2023க்குள் மொத்த கடன் தொகையும் செலுத்தி விட்டேன். ஆனால் கூடுதலாக பணத்தை செலுத்தினால் தான் ஆவணங்களை வழங்க இயலும் என தெரிவித்து விட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய அனைத்து தொகையும் செலுத்திய பின்னரும், எனது ஆவணங்களை திரும்ப வழங்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அடமான ஆவணங்களை வழங்க வங்கியின் தலைமை மேலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் நீலமேகம் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து தொகையையும் செலுத்திய பின்னரும், வங்கியில் இருந்து கூடுதலாக ரூ.5 லட்சம் செலுத்தினால் தான் ஆவணங்களை வழங்க முடியும் என்கின்றனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், வங்கியின் தலைமை மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர். பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத்குமார் நேரில் ஆஜராகி, வரும் திங்கட்கிழமை(பிப்.17) சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதாக கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம் இருந்து அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும் வங்கியின் தலைமை மேலாளர் பிப். 17ம் தேதி காலை 11 மணிக்கு மனுதாரரின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்க வேண்டும். தடையில்லா சான்றையும் வழங்க வேண்டும். சொத்தை வங்கியின் பெயரில் பதிவு செய்ததை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பழி வாங்கும் நோக்கில் நடந்து கொண்ட தலைமை மேலாளர் ஸ்ரீநாத்குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பணத்தை ஆவணங்களை ஒப்படைக்கும்போது மனுதாரரின் வீட்டிற்கு நேரில் சென்று அனைத்து ஆவணங்களுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என கருத்து தெரிவித்தனர்.