புதுடெல்லி: ரூ.13,000 கோடி வங்கி கடன் மோசடி குற்றவாளி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. நீரவ் மோசடி லண்டனுக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனர். லண்டன் போலீசார் கடந்த 2019 மார்ச்சில் நீரவ் மோடியை கைது செய்து அங்கு சிறை வைத்தனர்.
இந்நிலையில், இதே வழக்கில் சம்மந்தப்பட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி (46) அமெரிக்காவில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை நாடு கடத்த சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். நேஹல் மோடி மீது 2 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வரும் 17ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. அப்போது நேஹல் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.