சென்னை: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) வழங்கியது.
புதுடில்லியில் நடந்த இதற்கான விழாவில் ஆணைய தலைவர் மனோஜ் குமார், தனது குழுவினருடன் சேர்ந்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இம்மானியத்தை வழங்கினார். இந்நிகழ்வில் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரூப் ராசி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கேவிஐசி தலைவர் மனோஜ் குமார் பேசும்போது, ‘‘பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் நிதி உதவி வழங்குவதோடு, லட்சக்கணக்கான இளைஞர்கள் பெண்கள் மற்றும் கைவினைஞர்களை சுயதொழிலில் செய்து தொழில்முனைவோருடன் இணைக்கும் சமூக இயக்கமாகவும் மாறியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பை உருவாக்குவதில் இத்திட்டத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாட்டின் 6 மண்டலங்களும் இந்த நிதியுதவி திட்டத்தில் பெருமளவில் பயனடைந்துள்ளன.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா கேரளாவில், 4,565 திட்டங்களுக்கு ரூ.116 கோடி மானியம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இத்திட்டங்களுக்கு ரூ.343 கோடிக்கும் அதிகமான கடன்கள் அனுமதிக்கப்பட்டன. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,18,185 குறு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன, இதற்காக இந்திய அரசு ரூ.73,348 கோடி கடனை அனுமதித்துள்ளது. இதற்கு ஈடாக, பயனாளிகளுக்கு ரூ.27,166 கோடி விளிம்புத்தொகை மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 90,04,541க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், இது நாட்டின் மிகவும் பயனுள்ள சுயதொழில் திட்டங்களில் ஒன்றாகும்’’ என்று தெரிவித்தார்.