சென்னை: கோவளம் அருகே சாலையோரம் நின்ற லோன் வேன் மீது கார் மோதி நொறுங்கியதில் 4 வாலிபர்கள் தலை, உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரை சேர்ந்தவர் சுல்தான். மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது மகன் முகமது ஆஷிக் (22), தனது தந்தையுடன் சிறிது காலம் மலேசியாவில் இருந்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கோலாலம்பூரில் விமானத்தில் ஏறி கொழும்பு வழியாக வரும் விமானத்தில் நள்ளிரவு சென்னைக்கு வந்தார்.
நள்ளிரவு 12.45 மணிக்கு வந்து இறங்கிய அவர், சோதனைகள் முடிந்து 1.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் அஸ்ரப் முகமது (22), ஆதில் முகமது (20), இம்ரான்கான் (23) ஆகியோர் காரில் வந்து காத்திருந்தனர். முகமது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது லக்கேஜ்களை கார் டிக்கியில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்கு செல்லாமல் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம், மாமல்லபுரம் சென்றனர். அங்கு, சிறிதுநேரம் ஜாலியாக இருந்துவிட்டு அதிகாலை 4 மணியளவில் காரில் சென்னையை நோக்கி புறப்பட்டனர்.
சுமார் 4.40 மணியளவில் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் லோடு வேன் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் அதிவேகத்தில் 4 பேருடன் வந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லோடு வேன் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி சம்பவ இடத்திலேயே முகமது ஆஷிக், அஸ்ரப் முகமது, ஆதில் முகமது, இம்ரான்கான் ஆகிய 4 பேரும் தலை, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் ஏற்பட்ட சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, யாரையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு உடல் நசுங்கி கிடந்ததால் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இயந்திரங்கள் மூலம் நசுங்கிக் கிடந்த காரை அகற்றிவிட்டு, 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பழுதாகி நின்றிருந்த லோடு வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமான லோடு வேன், சென்னை மயிலாப்பூரை சேர்ந்தது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்காக டெக்கரேஷன் பொருட்களை இறக்கிவிட்டு, திரும்பி மயிலாப்பூருக்கு வந்தபோது செம்மஞ்சேரி குப்பத்தில், லோடு வேனில் கோளாறு ஏற்பட்டதால் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த லோடு வேனை ரங்கநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஊர் சுற்றியதால் விபரீதம்
மலேசியாவில் இருந்து வந்தவர் நேரடியாக வீட்டிற்கு சென்றிருந்தால் விபத்து நடந்திருக்காது. ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுத்ததால், விபத்தில் சிக்கி 4 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். மலேசியாவில் இருந்துகொண்டு வந்த ஒரு பார்சல் மற்றும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விபத்து நடந்தபோது காரில் இருந்த 4 பேரும் மது அருந்தி இருந்தார்களா அல்லது ஜாலியாக வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்களா என பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
* மகனின் நிலையால் தந்தை கதறல்
விபத்து நடந்ததும் அங்கு வந்த போலீசார் உடல்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தினர். உடல்கள் நசுங்கி கிடந்ததால் காரை உடைத்து உடல்களை மீட்டனர். அப்போது காரில் 2 பாஸ்போர்ட்கள், டிரைவிங் லைசென்ஸ், 4 செல்போன்கள் இருந்தன. அப்போது வந்த செல்போன் அழைப்பு ஒன்றின் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். முகமது ஆஷிக்கின் தந்தை சுல்தான் போலீசாரிடம் பேசி தனது மகனின் நிலை குறித்து அழுதபடியே கேட்டார். நேற்று முன்தினம் மாலைதான் ஏர்போர்ட்டில் வழியனுப்பினேன் என்று அவர் கதறி அழுதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.