தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த பெண்கள் 17 பேர் வாடியூர் அருகே விவசாய வேலைக்காக லோடு ஆட்டோவில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். வாடியூர் அருகே வளைவில் திரும்பும்போது லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த 14 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிந்து லோடு ஆட்டோ டிரைவர் தேவேந்திரனை (25) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.