Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லி விழுந்த பெரும்பயிர் சாப்பிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 37 பேராசிரியர்கள் வீடு திரும்பினர்: சென்னை பல்கலை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: சென்னை கிண்டி காந்தி மண்டபம் சாலையில் சென்னை பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. பயிற்சியின் இடையே அனைத்து பேராசிரியர்களுக்கும் தேனீர் மற்றும் அவித்த பெரும்பயிர் வழங்கப்பட்டது.

50க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பயிர் வழங்கப்பட்ட போது, பெரும் பயிரில் பல்லி இறந்து கிடந்ததை பல்கலைக்கழக ஊழியர் கவனித்தார். அதற்குள் 37 பேராசிரியர்கள் பல்லி இறந்த பெரும் பயிரை சாப்பிட்டு முடித்துவிட்டனர். இதை பார்த்த பயிற்சிக்கு வந்த பேராசிரியர்கள் அதிர்ச்சியில் ‘எங்களை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், பதற்றமடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக 22 பெண் பேராசிரியைகள் உள்பட 37 பேராசிரியர்களை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அங்கு பேராசிரியர்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்ற டாக்டர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் கண்காணித்து அனைவரையும் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்.

பின்னர் பல்லி இறந்த கிடந்த பெரும் பயிர் விநியோகம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பேராசிரியர்கள் குழு ஒன்று விசாரணை நடத்தினர். அப்போது, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பேராசிரியர்களுக்கு தேனீர், காபி, நொறுக்கு தீனி, உணவு ஆகியவை வழங்க தனியார் கேட்டரிங் மூலம் வழங்கப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து பல்லி இறந்த பெரும்பயிர் விநியோகம் செய்த கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை அளித்த தகவலின்படி கோட்டூர்புரம் போலீசார் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.