சென்னை: கொடுங்கையூரில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பமாக, டாக்டரே கொலை செய்தது அம்பலமானது. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டிய டாக்டர், 25 சவரன் நகைளை திருடிச் சென்ற பரபரப்பு தகவல்களும் தெரிய வந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவரது மனைவி வரலட்சுமி (46). இவர்களது மகள் நித்யாஸ்ரீ என்ற நித்யா (26). மகன் தமிழ்செல்வன் (25). அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் கடந்த 5 வருடங்களாக வேலை செய்து வருவதாக நித்யா அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவரது தந்தை பாஸ்கர் செக்யூரிட்டி வேலை செய்கிறார். இவரது மனைவி வரலட்சுமி வீட்டு வேலை செய்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் மகள் மற்றும் மகனை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், நித்யா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்குகிறேன் எனக் கூறி தனியாக தங்க ஆரம்பித்துள்ளார். பிறகு இவருக்கு கொடுங்கையூர் விவேகானந்தா காலனி 6வது தெருவை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. பாலமுருகன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.
இதற்கிடையே, இவர்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 5வது தெருவில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மதியம் நித்யா, ‘எனது பெற்றோர் வீட்டிற்கு வருவதால் நீ வீட்டில் இருக்க வேண்டாம்’ எனக் கூறி பாலமுருகனை வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், மறுநாள் வியாழக்கிழமை போன் செய்தபோது நித்யா போனை எடுக்காததால் அன்று மாலை 5 மணி அளவில் பாலமுருகன் மீண்டும் நித்யா வீட்டிற்கு சென்று பார்த்த போது உள்ளே அவர் மயங்கி கிடந்தார்.பாலமுருகன் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து நித்யாவை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்யாவின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நித்யாவின் பெற்றோர்களை வரவழைத்து விசாரித்தனர். அதில், நித்யா ஒரு பையனோடு பழகி வருவது மட்டுமே தெரியும். லிவிங் டுகெதர் முறையில் இருப்பது தெரியாது. நித்யாவிடம் 25 சவரன் நகைகளை காணவில்லை. எனது மகளை பாலமுருகன் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்திருக்கலாம் என புகார் அளித்தனர். பாலமுருகனிடம் விசாரித்தபோது நித்யாவின் பெற்றோர் அடிக்கடி நித்யாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும், கடைசியாக நித்யாவை பார்க்க அவரது தாய் வந்தபோது கூட நான்காயிரம் ரூபாய் நித்யாவின் பர்சிலிருந்து எடுத்ததாகவும் இதன் காரணமாக, நித்யாவிற்கும் தாய்க்கும் சண்டை ஏற்பட்டதாகவும், நீண்ட நேரம் நித்யா போனை எடுக்காததால் வீட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நித்யாவின் போனில் ஒருவர் தொடர்புகொண்டது தெரிந்தது. அவரை போலீசார் வரவழைத்தனர். அவர் ஒரு டாக்டர். அவரை மிரட்டி நித்யா எட்டரை லட்சம் ரூபாய் வரை வாங்கியது விசாரணையில் தெரிந்தது. நித்யா ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி தனது பெற்றோர்களையும் உடன் பழகுபவர்களையும் ஏமாற்றி உள்ளார். ஆனால், நித்தியா வீடியோ காலில் அரை நிர்வாணமாக இருப்பதற்கு குறிப்பிட்ட தொகை முழு நிர்வாணமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என பேசி பலரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்துள்ளதும் தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பே நித்யாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் டாக்டர் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நித்யாவின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளில் நித்யா இறந்த அன்று வீட்டிற்கு டாக்டர் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் சைதாப்பேட்டை சடையப்பன் தெருவை சேர்ந்த டாக்டர் சந்தோஷ் குமார் (27) எனபவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தார். அவரை நேற்று காலை காவல் நிலையத்திற்கு வர சொல்லி விசாரணை செய்தார். சந்தோஷ் குமார் கடந்த 2016 முதல் 2022 வரை மருத்துவ படிப்பு முடித்துவிட்டு டாக்டராக ஆலந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
சந்தோஷ் குமாரின் தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள். சந்தோஷ் குமார் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது அந்த திருமணத்தில் மேக்கப் போடும் பெண்ணாக நித்யா வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது. நித்யாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எட்டரை லட்ச ம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். இவ்வாறு வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஆதம்பாக்கத்தில் தனியாக ஒரு அரை எடுத்து இருவரும் லிவிங் டுகெதர் என்ற முறையில் ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென டாக்டர் சந்தோஷ் குமார் நித்யா வீட்டிற்கு செல்லும்போது நித்யா கவுதம் என்ற நபருடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் நித்யா மீது புகார் அளித்தார். அதன் பிறகு நித்யா சந்தோஷ் குமாரை சமாதானம் செய்து, அங்கிருந்து அம்பத்தூருக்கு வந்து அங்கு ஒன்றாக தங்கி வந்துள்ளனர். ஆனால் நித்யாவின் போக்கு பிடிக்காததால் டாக்டர் விலக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா சந்தோஷ் குமாரை மிரட்ட ஆரம்பித்துள்ளார். நித்யா மற்றும் சந்தோஷ் குமார் இருவரும் ஒன்றாக இருந்தபோது நிர்வாண நிலையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சந்தோஷ் குமாரின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் வேறு வழி இன்றி சந்தோஷ் குமார் நித்யா அழைக்கும் போதெல்லாம் சென்று பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி நித்யா டாக்டர் சந்தோஷ் குமாருக்கு போன் செய்து உன்னை பார்க்க வேண்டும் வா என அழைத்துள்ளார். டாக்டர் சந்தோஷ் குமார் 4ம்தேதி இரவு 7.30 மணிக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நித்யாவிற்கு டாக்டர் சந்தோஷ்குமார் மசாஜ் செய்துள்ளார். அப்போது நித்யா குப்புற படுத்துக்கொண்டு, உன்னை எங்கு சென்றாலும் விடமாட்டேன். நீ தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார்.
நித்யாவின் முதுகின் மேல் அமர்ந்து மசாஜ் செய்து கொண்டிருந்த சந்தோஷ்குமார் அந்த சமயம் ஆத்திரம் வந்து தலையை அப்படியே தலையணையில் அழுத்தி நித்யாவை துடிதுடிக்க மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளார். பின்பு நித்யா நகை வைத்திருந்த அவரது லாக்கரை திறக்க முயன்றுள்ளார். நித்யாவின் கைவிரல் பட்டால்தான் லாக்கர் திறக்கும் என்பதால் வித்யாவின் இடது கை கட்டை விரலை வைத்து அதனை திறந்து 25 சவரன் நகைகளையும் எடுத்துக்கொண்டு மறுநாள் 5ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அங்கிருந்து சென்றுள்ளார்.
கொள்ளையடித்த நகைகளை டாக்டர் சந்தோஷ் குமார் அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் முஜ்பூர் பாஷாவிடம் ஒரு கட்டைப் பையில் துணிகளுடன் போட்டு, இதை வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என கொடுத்துவிட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, முஜ்பூர் பாஷாவிடம் இருந்து 25 சவரன் நகை மற்றும் வைரக் கல் பதித்த நான்கு நகைகளையும் பறிமுதல் செய்தனர். முஜ்பூர் பாஷாவுக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் டாக்டர் சந்தோஷ்குமாரிடம் போலீசார் விசாரணை செய்த போது, ‘‘ஒரு காலகட்டத்தில் லிவிங் டுகெதர் முறையில் நித்யாவுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். பிறகு அவரது செயல் தெரிந்ததும் விலக ஆரம்பித்தேன். ஆனால், அவர் என்னை விடுவதாக இல்லை. நான் மருத்துவர் என்பதாலும் எனது குடும்ப சூழ்நிலையை தெரிந்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார். நான் வரவில்லை என்றால் நிர்வாண படங்களை அனைவருக்கும் அனுப்புவேன் என மிரட்டினார். இதனால் வேறு வழியின்றி சம்பவத்தன்று நித்யாவுடன் உல்லாசமாக இருந்தபோது அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மிகவும் பாதித்தது. அந்த வெறியில் அவரை கொலை செய்து விட்டேன்’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து, டாக்டர் சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டாக்டர் சந்தோஷ்குமாரின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். தனது மகனையும் மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மருத்துவராக்கினர். ஆனால் அவரின் சபல புத்தியால் தற்போது வாழ்க்கையை தொலைத்து விட்டு கொலையாளியாக சிறைக்கு சென்று உள்ளார். இதேபோன்று உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் பழகி கடைசியாக வாழ வேண்டிய வயதில் தனது உயிரையே விட்டுள்ளார் இளம்பெண்.
தற்போது சமூக வலைதள ஆதிக்கத்தின் மூலம் தவறு செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனை ஆண்களும் பெண்களும் அதிக அளவில் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் சமூகத்தில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன, எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்கு டாக்டர் சந்தோஷ்குமாரின் வாழ்க்கையும் நித்யாவின் வாழ்க்கையும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. நமது வாழ்க்கையில் ஏதும் நடக்காத வரை நமக்கு அது ஒரு பாடம்தான். அதிலிருந்து இளைய தலைமுறையினர் பாடம் கற்றுக் கொண்டால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதே நிதர்சனமான உண்மை. லிவிங் டுகெதர் முறையில் நித்யாவுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். பிறகு அவரது செயல் தெரிந்ததும் விலக ஆரம்பித்தேன். ஆனால், அவர் என்னை விடுவதாக இல்லை.
* டாக்டர் சிக்கியது எப்படி?
முதலில் நித்யா உயிரிழந்தவுடன் அவருடன் இருந்த பாலமுருகன் மீதுதான் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. அதன் பிறகு நித்யா கடைசியாக யாருடன் பேசியுள்ளார் என பார்த்தபோது அது டாக்டர் சந்தோஷ்குமாரின் தொலைபேசி எண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தபோது கூட, நாங்கள் லிவிங் டுகெதர் முறையில் இருந்தது உண்மைதான். ஆனால் நான் அவரிடம் நிறைய பணம் கொடுத்து வந்தேன். பல ஆண்கள் அவருடன் பழகி வந்தனர். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து டாக்டரை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சிசிடிவி காட்சியை பார்த்த போது டாக்டரின் உருவமும் சிசிடிவியில் வந்ததால் சம்பவத்தன்று நீங்கள் எங்கு இருந்தீர்கள் எனக் கேட்டபோது, டாக்டர் நான் அங்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை தூக்கிச் சென்று விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.
* பர்சனல் லோன் போட்ட டாக்டர்
நித்யாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலவு செய்ய டாக்டர் சந்தோஷ்குமார் தனியார் வங்கியில் 6 லட்ச ரூபாய் பர்சனல் லோன் எடுத்துள்ளார். இதை அவர் மாதாமாதம் கட்டி வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதேபோன்று பல இடங்களில் கடன் வாங்கி நித்யாவிற்கு அவர் பணம் கொடுத்து செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது.
* 2 போன்கள்
கொலை செய்யப்பட்ட நித்யா இரண்டு போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். ஒன்றில் வீடியோ கால் மற்றும் கஸ்டமர்களை அட்டன் செய்ய பயன்படுத்தி வந்துள்ளார். மற்றொரு போனில் லிவிங் டுகெதர் முறையில் மிகவும் நெருக்கமாக உள்ளவர்களிடம் மட்டும் பேசுவதற்கு பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இவரது மொபைல் போனில் இருந்த சில ஆண்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு இரவுக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் நேரத்திற்கு ஏற்றார்போல் பணம் வசூல் செய்து கஸ்டமர்களை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.