சென்னை: கால்நடை, மீன்வளத்துறை சார்பில் ரூ.180 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.3 கோடியே 5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 17 லட்சத்து 35 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.22 கோடியே 32 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 28 கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டம் மாதவரம் பால்பண்ணையில் கால்நடை நோய் தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பதற்காக ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வக கட்டிடம், நாட்டு சிறுவிடை கோழியை வளர்ப்பதற்காக ரூ.77 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கோழிக்கூண்டு கொட்டகை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள பல்கலைக்கழக கண்டுபிடிப்பு மற்றும் கருவி தயாரிப்பு மையத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட ரூ.2 கோடி ரூபாய் செலவில் சேமிப்பு அறை, தயாரிப்பு பட்டறை மற்றும் அலுவலகம் என மொத்தம் ரூ.33 கோடியே 11 லட்சம் செலவிலான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ரூ.22 கோடியே 77 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள படகு அணையும் ஜெட்டி என மொத்தம் ரூ.112 கோடியே 27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன்விதை பண்ணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில், தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 8,506 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடியே 82 லட்சத்து 57 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மைய கட்டிடம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தலைமை செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் கோபால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.