Wednesday, September 27, 2023
Home » கல்லீரல் அறிவோம்…

கல்லீரல் அறிவோம்…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உடல்நலன் காப்போம்!

மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.

இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு நடுவில் பித்த நீர்ப் பை வைக்கப்பட்டு இருக்கும். சிறுநீரகம் சிறுநீர் உருவாக்குவது போல இது பித்த நீர் உருவாக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்த நீர் இருக்கும். சாப்பிடும்போது உணவுடன் கலந்து கொண்டு வயிற்றில் இருந்து வரும் அமிலம் கலந்த உணவை காரத் தன்மையால் சமன் செய்த பிறகே அந்த உணவிற்கு செரிமானத் தன்மை கிடைக்கிறது.இந்த நீர் தான் சில சமயம் வெறும் வயிற்றில் வாந்திவந்தால் மஞ்சள் நிறத்தில் வெளியே வரும். ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும் போது அதில் உள்ள சத்துக்கள் உறியப்பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரல் வருகின்றது.

சத்துக்கள்

செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும்போது அதில் உள்ள சத்துக்கள் உறியப் பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரலுக்கு வருகின்றது. நாம் சாப்பிடும் எல்லா வகையான உணவும், கார்போஹைட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களால், கட்டமைக்கப் பட்டுள்ளது.திட, திரவ உணவுகள், சைவ மற்றும் அசைவ உணவு எல்லாவற்றிலும் இவை மட்டுமே உள்ளது, கலந்து இருக்கும் விகிதம் மட்டுமே மாறுபடும்.

நாம் உணவு சாப்பிட்ட பின் அதை உடைக்கும் பணி வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஆரம்பிக்கிறது. மெல்லும் போது, உணவு உடைக்கப்பட்டு நொதிகள் கலந்து வேலை செய்ய ஏதுவாகின்றது.இது இரைப்பை வழியாகச் செல்லும் போது, ஆசிட் ஊற்றி தரையை கழுவப்படும் போது எவ்வாறு அழுக்குகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுமோ அதே மாதிரி உணவில் இந்த அடிப்படை கூறுகள் தவிர மற்றவை சுத்தம் செய்யப்படுகின்றது.அமிலம் கலந்த உணவை சிறு குடலில் அதன் ph தன்மை நிலைப்படுத்துவதற்காக அதனுடன், கல்லீரல் இருந்து வரும் பித்த நீர் கலக்கப்படுகிறது.

பித்தநீர் சமன் படுத்துவது மட்டும் இல்லாமல், எண்ணெய்ப் பிசுக்கு நீக்கும் டிடர்ஜெண்ட் சோப்பு போல, உணவில் கலந்து உள்ள கொழுப்புக்களை, கரைக்கிறது. அதன் பின், அதில் கணையத்தில் இருந்து வரும் என்சைம் அதாவது, நொதிகள் உணவுடன் கலந்து, வேதியியல் செரிமானம் (chemical digestion) அதை அணு அணுவாக, உடைக்கிறது.
கார்போஹைட்ரேட்-டின் அடிப்படை மூலக்கூறு, குளுக்கோஸ்.

புரதம் அமினோ அமிலமாகவும், (amino acid) கொழுப்புச் சத்து, கொலஸ்டிரால், மற்றும் கொழுப்பு அமிலம் (fatty acid) ஆக பிரிக்கப்பட்டு உறியப்பட்டு சிறு குடலில் உள்ள இரத்த நாளங்களின் மூலம் கல்லீரலுக்கு வருகின்றது.இங்கே இதன் வேலை முடிந்த பின்னர் தான் இருதயம் மூலம் உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு செல்கிறதுகிட்டத்தட்ட வாய்வழியாக உட்கொள்ளப்படும் உணவு, மருந்து மற்றும் மது எல்லாமும் கல்லீரல் மூலம் பரிசோதிக்கப்பட்டு, தேவை இல்லாதவை நீக்கப்பட்டு அதன் பின்தான் உடலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

நுண் கட்டமைப்பு (microscopic structure)

கிட்டத்தட்ட வாய்வழியாக உட்கொள்ளப் படும் உணவு, மருந்து மற்றும் மது எல்லாமும் கல்லீரல் மூலம் பரிசோதிக்கப்பட்டு, தேவை இல்லாதவை நீக்கப்பட்டு அதன் பின்தான் உடலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.மனித உடலில் சுத்த இரத்தம் ஒடும் குழாய்கள் – தமனி (artery) அசுத்த இரத்தம் ஒடும் குழாய்கள்- சிரை என்று (veins) இரண்டு வகை உண்டு. எல்லா உறுப்பும் சுத்த இரத்தம், தமனி வழியாக உள்ளே எடுத்துக் கொண்டு அதன் வேலை முடிந்ததும், கழிவுகளும் சேர்த்து சிரைவழியே வெளியே வரும்.

ஆனால் கல்லீரல் இதற்கு விதி விலக்கு, இங்கே உள்ளே வரும் இரத்தம் 70% சதவிகிதம் portal vein மூலமும் 30% மட்டுமே ஈரல் தமனி (hepatic artery) மூலம் வருகிறது. சிறு குடலில் இரைப்பை (stomach), உணவுக்குழாய் (esophagus), மண்ணீரல் (spleen), கணையம் (pancreas), பெருங்குடல் (large intestine) ஆகியவற்றிலிருந்து வெளியேவரும் அனைத்து அசுத்த இரத்தமும், போர்ட்டல் சிரை மூலம் கல்லீரலுக்கு வருகின்றது.

இந்த நீர்த்தொட்டியாக அறுங்கோணம் வடிவில் உள்ள ஒரு சைக்கிள் சக்கரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். டயர் மாதிரி போர்ட்டல் சிரை சுத்தி இருக்கின்றது. அதிலிருந்தது கிளைகள் மூலம் இரத்தம் சைக்கிள் கம்பிகள் வடிவில் நடுமையம் நோக்கி வருகின்றன. நடு மையத்தில் central vein அந்த இரத்தம் உள் வாங்கி ஈரல் சிரை (hepatic vein) வழியாக, இருதயம் நோக்கி மகா சிரை (inferior vena cava) நோக்கி அனுப்புகிறது. இப்பொழுது அந்த சைக்கிள் கம்பிகள் வடிவம் வருவோம். அந்த இடத்தில்தான் ஈரல் செல்கள் (hepatocytes) வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், கல்லீரலின் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது.

ஈரல் செல் (hepatocyte) கல்லீரலின் அடிப்படை அலகு ஆகும். இது நாம் சிறு வயதில் படித்த செல் அமைப்பிற்கு ஒத்ததுதான். செல் சுவர் (cell membrane) மைட்டோ காண்ட்ரியா (mito chondria), சைட்டோ பிளாசம், மற்றும் நியூக்ளியஸ் என்ற பாகங்கள் உடையது. ஏன் இவ்வாறு பிரித்துக் கூறப்பட்டுள்ளது என்றால் இவை எல்லாம் தனித்தனியாக வேலை செய்கின்றன. ஈரல் செல் (hepatocytes) தவிர, பித்த நீர் நாள செல்கள் (cholangio cytes), கிருமி அழிக்கும் செல்கள் (macrophages) போன்றவைகளும் உள்ளன.

குடலில் இருந்து வரும் சத்துக்கள், மூலப்பொருட்களாகக் கொண்டு வளர் சிதை மாற்றம் செய்து உடலுக்குத் தேவையான பொருட்களாக மாற்றுவதில், ஈரல் செல் (hepato cyte) தான் முக்கிய பங்கு ஆற்றுகிறது. முதலில் கார்போஹைட்ரேட் வளர் சிதை மாற்றம். (Carbohydrate metabolism) நாம் சாப்பிடும் உணவில் பெரும்பங்கு வகிப்பது இது. அரிசி முழுவதும் கார்போஹைட்ரேட்டினால் மட்டுமே ஆனது. சோறு ஆனது, அதன் அடிப்படை அலகு, குளுக்கோஸ் ஆக, குடலில் பிரிக்கப்பட்டு, இரத்தம் மூலம் கல்லீரலுக்கு வருகின்றது.

இது எப்பவும் ஓரே அளவாக இருப்பதில்லை. நன்றாக சாப்பிடும் போது, மிக அதிக அளவிலும், சாப்பாடுக்கு இடைப்பட்ட நேரங்களில் குறைவாகவும், விரத நாட்களில், ஒன்றும் இல்லாமலும் இருக்கிறது. அந்த நேரங்களில், உடம்பில் மற்ற பாகங்களுக்கு செல்லும் இரத்தத்தில், சர்க்கரை அளவை ஓரே சீராக சம நிலையில் வைத்து இருக்கும் பொறுப்பு கல்லீரல் சார்ந்தது. சாப்பிட்டு முடிந்ததும், அதிக அளவில் வரும் குளுக்கோஸ், கிளைகோஜன் (glycogen) ஆக மாற்றம் செய்யப்பட்டு இதில் சேமித்து வைக்கப்படுகின்றது.

இடைப்பட்ட நேரங்களில், உணவு எடுக்க தாமதமாகும் போது அல்லது விரத காலங்களில் இதை மீண்டும் குளுக்கோஸ் ஆக, மாற்றி ஓரே சீரான நிலையை அடைய வைக்கிறது. அதனால் கல்லீரல் உடல் சக்தியின் சேமிப்பு கிடங்கு என்று சொல்லலாம். அதனால்தான் கல்லீரல் பாதிக்கப்படும் போது அதிக அளவு கரும்புச்சாறு போன்ற குளுக்கோஸ் நிறைய உள்ள உணவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.

புரதச்சத்து வளர்சிதை மாற்றம் (protein metabolism)

அசைவ உணவு, பருப்பு மற்றும் புரதம் சத்து நிறைந்த உணவுகள் உட் கொள்ளும் போது, அது அமினோ அமிலம் ஆக குடலில் சிதைக்கப்படும்போது, அம்மோனியா (NH4) எனப்படும் வாயு உருவாகிறது. இந்த வாயு இரத்தம் மூலம் மூளையைத் தாக்கி அதனை செயல் இழக்க செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கல்லீரல் இதை வேதிவினைகள் மூலம் யூரியா ஆக மாற்றி பித்த நீர் மூலம், மலத்துடன் வெளியேற்றிவிடுகிறது.

கல்லீரல் பாதிக்கப்படும் போது இந்த பணி சரி வர நடக்காத காரணத்தினால், அம்மோனியா முளையைத் தாக்கி, அதன் சுதாரிப்பு தன்மையை படிப்படியாக இழக்கச் செய்கிறது (hepatic encephalopathy). இதனால் மட்டுமே, அந்தக் காலங்களில் புரதச் சத்து உள்ள உணவு குறைந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அசைவ உணவுகள் தவிர்த்து பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப் பட்டது. கல்லீரல் பாதிப்பு சரியான பிறகு எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு புரதச் சத்து கல்லீரல் உள்ளே வரும் போது, அவை கொழுப்பாக மாற்றி சேமிக்கப்படுகின்றது.

கொழுப்பு வளர்சிதை மாற்றம் (Lipid metabolism.)

கொலஸ்ட்ரால் உருவாக்குதல், மற்றும் கொழுப்பு அமிலங்களை உடைத்து உடலுக்கு தேவையான சக்தியை வழங்கல், லைப்போ புரோட்டின் தயாரித்தில் போன்றவை முக்கியமான வேலைகள் ஆகும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள எந்த ஒரு சத்தும் அடுத்த வகையாக மாற்றிக்கொள்ள கல்லீரலால் முடியும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தால் கூட இரத்தத்தில் எப்படி கொலஸ்டிரால் அதிகம் உள்ளது என்று சந்தேகப் படுபவர்களுக்கு உள்ள பதில்தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: இளங்கோ

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?