நியூயார்க்: ‘லைவ் ஸ்ட்ரீம்’ சலுகை திட்ட அறிவிப்பால் நியூயார்க் சதுக்கத்தில் பிரபல யூடியூபரின் ரசிகர்கள் அத்துமீறி செயல்பட்டதால் யூடியூபர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான ஆன்லைன் ‘கேமிங்’ இணைய தளமான ‘ட்விட்ச்’-யின் உரிமையாளரும், நகைச்சுவை வீடியோக்களை வெளியிடுவோருமான கை செனாட் (21) என்பவர், யூடியூப் வீடியோக்களில் லைவ் ஸ்ட்ரீம்களுக்காக சலுகை திட்டத்தை அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிக் கிவ்அவே’ என்ற பெயரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு விளம்பரப்படுத்தினார்.
இதையறிந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள், நியூயார்க்கின் யூனியன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது ஏறியும், தெருவிளக்குகளின் மீது ஏறியும் ஆட்டம் போட்டனர். மேலும் கடைகளில் நாற்காலிகளை தூக்கி வீசுவது, குப்பை தொட்டிகளை வீசுவது, பூங்காவை சேதப்படுத்தியது, வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பல தெருக்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் போக்குவரத்து தடைபட்டது.
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகளை எடுத்தாலும் கூட, அவர்களை தள்ளிவிட்டு ஆட்டம் போட்டனர். ஒருவழியாக கூட்டத்தை போலீசார் அப்புறப்படுத்தினர். போலீசாருக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக ெவடித்தது. அதையடுத்து போலீசாரின் தீவிர நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இத்தனை பிரச்னைக்கும் காரணமான கை செனாட் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க்கை திணறடிக்கும் புலம்பெயர்ந்தோர்: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தினமும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வருகின்றனர். அவர்கள் நியூயார்க் நகரின் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வெளியே உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 500 அகதிகள் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதார மற்றும் மனித சேவைகளுக்கான துணை மேயர் அன்னே வில்லியம்ஸ்-ஐசோம் கூறுகையில், ‘அகதிகளாக வருவோருக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கிறோம். புலம்பெயர்ந்து புகலிடம் தேடி வருவோரின் கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம். கடந்த வசந்த காலத்தில் 95,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். நியூயார்க் நகரில் 13 மனிதாபிமான நிவாரண மையங்கள் உட்பட 194 இல்லங்கள் உள்ளன’ என்றார்.