வால்பாறை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா- மோனிகா தேவி தம்பதியின் மகள் ரோஷினி குமாரியை (7) கடந்த 20ம் தேதி சிறுத்தை கவ்விச் சென்றது. 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுமியின் சடலம், சிறுத்தை குதறி சாப்பிட்டதுபோக மீதம் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வால்பாறை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அங்கு கூண்டு வைத்தனர். நேற்று காலை அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கனமழை பெய்ததால் கூண்டை தார்பாய் வைத்து பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து வனச்சரகர் சுரேஷ்கிருஷ்ணா கூறுகையில்,“கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு 5 முதல் 6 வயது இருக்கலாம். சிறுமியை தாக்கி கொன்றது இந்த சிறுத்தைதான்” என்றார்.