Friday, July 18, 2025
Home மகளிர்நேர்காணல் கதை கேளு… கதை கேளு… சுவையான கதை கேளு!

கதை கேளு… கதை கேளு… சுவையான கதை கேளு!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு ஊருல ஒரு ராஜா… அவர் ஒரு நாயை பாசமாக வளர்த்து வந்தார். ராஜா வேட்டைக்கு போகும் போது உடன் அந்த நாயும் செல்லும்…’’ சின்ன வயசில் பாட்டி கதை சொல்ல கேட்கும் போது, ராஜா அரசர் உடையில் குதிரையில் வேட்டைக்கு செல்வது, உடன் நாய் நடந்து போவது என நம்முடைய மனதில் ஒரு கற்பனை ஓடும். ரேடியோ காலக்கட்டத்தில் ஒலிச்சித்திரம், நிகழ்ச்சி கற்பனையினை மேலும் வளர்த்தது.

தொலைக்காட்சி வந்த பிறகும் நம் கற்பனைத் திறன் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இன்று சமூகவலைத்தளங்களில் பல செய்திகள் இருந்தாலும் அவை ஒரு முழு நிறைவினை தருவதில்லை’’ என்கிறார்கள் சந்தோஷ் மற்றும் சதீஷ் சகோதரர்கள். இவர்கள் ஒலி வடிவில் ‘Tale O Meter’ என்ற ஓ.டி.டி தளம் ஒன்றை அமைத்துள்ளனர். இத்தளத்தில் கதைகள், விளையாட்டுகள், உண்மை சம்பவங்கள், குழந்தைகளுக்கு என பல சுவாரஸ்யமான பகுதிகளை அமைத்து மீண்டும் நம் கற்பனைக்கு வேலை கொடுத்துள்ளனர்.

‘‘சென்னைதான் எங்களின் பூர்வீகம். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். படிப்பை முடித்து விட்டு இருவருமே வெளிநாட்டில் வேலைக்காக சென்றுவிட்டோம். ஏழு வருடத்திற்கு முன் வெளிநாடு வேண்டாம் என்று முடிவு செய்து சென்னைக்கே வந்துட்டோம்’’ என்று பேச ஆரம்பித்தார் சந்தோஷ்.‘‘இங்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தோம். நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் ஒளிபரப்பப்படும் பிற மொழி வெப் சீரீஸ்களை தமிழாக்கம் செய்தோம். ஒரு மொழியினை தமிழாக்கம் செய்வது சுலபமானதில்லை. சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரல்களை தேட வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்டன. அவை பெரும்பாலும் உணவு, ஒருவரின் அன்றாட நிகழ்வு போன்றவற்றைதான் வெளியிடுகிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வதால் பார்ப்பவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று எங்களுக்கு தோன்றியது. மக்கள் விரும்ப வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும். எல்லாவற்றையும் விட இன்று இதை தெரிந்துகொண்டேன் என்று முழு நிறைவினை அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தோம். எங்களின் பலம் ஒலி சார்ந்த வேலை என்பதால், அதையே பயன்படுத்த திட்டமிட்டோம். எல்லாவற்றையும் விட வாடிக்கை யாளர்களை முழுமையாக ஈடுபட வைக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘டேல் ஓ மீட்டர்’ ’’ என்றவரை தொடர்ந்தார் சதீஷ்.

‘‘இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதுதான் வழக்கம். 30 வினாடிகளில் அனைத்தும் கொடுக்க முடியாது. அதனால் ஆப்பாக வடிவமைத்தோம். அப்போதுதான் நாங்க நினைத்தது போல் பல பகுதிகளை இதில் கொடுக்க முடியும். மேலும் மக்களாலும் அவர்களுக்கு விரும்பிய விஷயங்களை தேடிப் பார்த்து கேட்க முடியும். இது முழுக்க முழுக்க ஒலி வடிவிலான ஓ.டி.டி தளம். இதில் கதை, குழந்தைகளுக்கான குட்டி குட்டி செய்திகள், விளையாட்டு, சிந்திக்கக்கூடிய விஷயங்கள் என தனித்தனி பகுதியாக வடிவமைத்திருக்கிறோம். இன்றைய ஸ்ட்ரெஸ் உலகில் பலர் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். தூக்கத்தினை கொடுக்கக்கூடிய கதைகளும் இதில் உண்டு’’ என்றவர் அதில் உள்ள ஒவ்வொரு பகுதியினையும் விவரித்தார்.

‘‘தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்காகவே இரவு நேர கதைகளை ‘தூலி’ பகுதியில் தொகுத்திருக்கிறோம். கதையில் ஒலிக்கும் குரல் உங்களை தூக்கத்திற்கு அழைத்து செல்லும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள ‘ஒரு கப் ஆக்சிஜன்’. உதாரணத்திற்கு தற்போது கோவிட் பரவி வருவதால், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிவது, கர்ப்பிணி பெண்கள், பெரியவர்கள் பாதுகாப்பாக இருப்பது போன்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பகுதி. இது போல் பல விஷயங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து இன்ஸ்பிரேஷன். ஒருவர் வாழ்க்கையில் முன்னேற சிறிய இன்ஸ்பிரேஷன் தேவைப்படும். அது போன்ற வாழ்க்கையினை வாழ்ந்து வருபவர்கள் தங்களின் இன்ஸ்பிரேஷன் கதைகளை பகிரும் தளம். ‘கரண்டி டேல்ஸ்’, உணவுகள் தங்களைப் பற்றி கூறும் பகுதி. உருளைக்கிழங்கு, தான் உருவான கதை, அதனை எந்த நாட்டில் தடை விதித்துள்ளனர் குறித்த சுவாரஸ்யமான செய்திகள் அடங்கி இருக்கும். அதே போல் காபி எவ்வாறு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது. வெள்ளை பணியாரம். மஞ்சூரியன், பர்மா உணவுகள் என பல உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

‘விசிட்டிங் காடு’, இது குழந்தைகளுக்கான பகுதி. இதில் ஒவ்வொரு மிருகங்கள் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை குழந்தைகளுக்கு புரியும் வகையில் மற்றும் முறையில் விவரிப்பது. உதாரணத்திற்கு ஜெல்லி ஃபிஷ், தனக்கு மூளை என்ற உறுப்பு கிடையாது, டைனோசரஸ் உருவான காலத்திற்கு முன்பே தோன்றிய உயிரினம் போன்ற விஷயங்களை அந்த மீனே சொல்வது போல் வடிவமைத்திருக்கிறோம். குழந்தைகளும் ஜெல்லி ஃபிஷ் பேசுகிறது என்று ஆர்வமுடன் கேட்பார்கள்.

‘ஆடுகளம்’, விளையாட்டுத்தளம். இதில் க்விஸ், பாடலின் இசை மூலம் அதனை கண்டுபிடித்தல், ஒரே கதைத் தளம் இரண்டு படங்கள், நாம் வசிக்கும் ஊர் அல்லது நகரத்தினை கண்டுபிடித்தல்… இதே போல் பல சுவாரஸ்யமான விளையாட்டுப் பகுதிகள் உள்ளன. விளையாட்டு என்றாலும் அதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். கதைக்கென தனிப் பகுதி அமைத்திருக்கிறோம். அதனை பெரும்பாலும் பெண் எழுத்தாளர்கள்தான் எழுதி இருக்கிறார்கள்.

அனைத்தும் ஆடியோ வடிவில் தருவதால் நம்முடைய சிந்தனை சிதறாமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த முடியும். எங்க ஆப்பின் சிறப்பே நிகழ்ச்சியின் நடுவே விளம்பரங்கள் மற்றும் சினிமா குறித்த புரமோஷன்கள் எதுவும் வராது என்பதால், எந்த தடையும் இல்லாமல் கேட்டு மகிழலாம். இது முழுக்க முழுக்க ஆடியோ தளம் என்பதால், அந்தந்த பகுதிக்கு ஏற்ற நரேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். சில செய்திகளை தில்லி கணேஷ் அவர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்தப் பகுதியினை அவரை பேச வைத்திருக்கிறோம். பாஸ்கியும் தன்னுடைய குரலினை இதில் ஒலிக்க செய்துள்ளார். இவர்களை போல் பல பிரபலங்கள் பல பகுதியினை வழங்கியுள்ளனர்.

முழுமையா சொல்லணும்னா டேல் ஓ மீட்டர் ஒரு மைண்ட்ஃபுல் என்டர்டெயின்மென்ட் தளம். இதைக் கேட்கும் அனைவரும் கண்டிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். கதை, விளையாட்டு போன்ற நரேஷன் மட்டுமில்லாமல் லைவ் ஷோக்களும் செய்கிறோம். நிலாச்சோறு, மொட்டை மாடியில் அப்பா கையில் சாப்பாட்டு உருண்டை பிடித்து கொடுக்க, பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசுவோம்.

அதை நிகழ்வாக ஒரு பவுர்ணமி இரவு அன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செய்தோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் டிக்கெட் பெற்று பங்குபெறலாம் என்று அறிவித்திருந்தோம். உணவு மட்டுமில்லாமல் கதை, விளையாட்டு என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருந்தது. அடுத்து ‘வில்லன்’ என்ற நிகழ்ச்சி கடந்த வாரம் நடத்தினோம். வில்லத்தனம் என்றால் என்ன? திமிருதான் வில்லத்தனமா? யாரு வில்லன்? அதை நாடக வடிவில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அரங்கேற்றினோம்’’ என்றவர் ஒரு குழுவாக இதனை செய்து வருவதாக குறிப்பிட்டார்‘‘ஆரம்பத்தில் நானும் சதீஷும் மட்டும் தான் செய்து வந்தோம்.

பல பகுதிகளை துவங்க திட்டமிட்டதால், சவுண்ட் என்ஜினியர், கன்டென்ட் கிரியேட்டர், எடிட்டர் என ஒரு தனிப்பட்ட குழுவினை அமைத்து ஒவ்வொரு பகுதியாக உருவாக்கினோம். நாங்க ஏற்கனவே ஆடியோ துறையில் இருந்ததால், அதற்கான ஸ்டுடியோவினை மிகவும் தரமாக அமைத்திருக்கிறோம். காரணம், இது முழுக்க முழுக்க ஒலி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் பேசும் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போது ஒலிபரப்பும் பகுதிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான பகுதிகளை அமைக்க திட்டமுள்ளது.

இந்த ஆப்பில் இணைய விரும்புபவர்கள், முதலில் ஆப்பினை பிளே ஸ்டோரில் டவுண்லோட் செய்து பதிவு செய்ய வேண்டும். தினமும் கேட்பவர்கள் என்றால் அவர்கள் அன்றைய செய்திகளை கேட்கலாம். ஏற்கனவே பதிவான செய்திகளை கேட்க விரும்பினால் மாதம் ரூ.100 சந்தா செலுத்தி கேட்கலாம். தற்போது 2000த்துக்கும் மேற்பட்ட செய்திகள் உள்ளது. தினம் கேட்டு மகிழுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களை சுவாரஸ்யமாக கொடுக்க நாங்க ரெடி’’ என்றனர் சகோதரர்களான சந்தோஷ், சதீஷ்.

தொகுப்பு: ஷன்மதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi