புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து இதே வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணை பெற்ற போதும் சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவலுக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் 17ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இதே வழக்கில் சிபிஐ அமைப்பு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட குற்றம் காட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் தனக்கு பிணை வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.