மும்பை: மகாராஷ்டிர அரசு கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க வருவாயைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில் தற்போது, மதுபானங்களுக்கான கலால் வரியை ரூ.14,000 கோடி உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் (ஐஎம்எப்எல்) மீதான கலால் வரி 3 முதல் 4.5 மடங்கு உயர்த்தப்படும். அதாவது, லிட்டருக்கு ரூ.260 வரை உயர்த்தப்படும்.
அதே நேரத்தில், நாட்டு தயாரிப்பு மதுபானங்கள் மீதான வரி ஒரு லிட்டருக்கு ரூ.180 முதல் ரூ.205 வரை உயரும். 180 மில்லி மதுபாட்டில்களுக்கான குறைந்தபட்ச விலை சில்லறை விற்பனையில் நாட்டு மதுபானத்திற்கு ரூ.80ம், மகாராஷ்டிரா தயாரிப்பு மதுபானத்திற்கு ரூ.140ம், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானத்திற்கு ரூ.205ம், பிரீமியம் வெளிநாட்டு மதுபானத்திற்கு ரூ.360 ஆக இருக்கும். இதையடுத்து மகாராஷ்டிராவில் மதுபானங்கள் விலை அதிகரிக்கிறது.