Wednesday, June 25, 2025
Home செய்திகள் பட்டுப்புழு வளர்ப்பில் லாபம் அள்ளும் சிங்கப்பெண்!

பட்டுப்புழு வளர்ப்பில் லாபம் அள்ளும் சிங்கப்பெண்!

by Porselvi

திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுக்கா, பனையன்குறிச்சி கிராமத்தில் பிரம்மாண்டமான ஷெட்டுகளை அமைத்து நேர்த்தியான முறையில் பட்டு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பானுரேகா இல்லத்தரசிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். மாதம்தோறும் லட்சத்தில் லாபம் பார்க்கும் இவரைச் சந்தித்துப் பேசினோம். “ சேலம் மாவட்டம்தான் எங்களுக்கு பூர்வீகம். எம்.எஸ்சி, பி.எட் படித்த நான் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். எனது கணவர் காந்திக்கு திருநெல்வேலியில் உள்ள சர்க்கரை ஆலையில் மேனேஜராக பணி கிடைத்ததால் நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தோடு திருநெல்வேலிக்கு வந்தோம். பின்னர் 10 ஏக்கர் நிலத்தில் கரும்புகளை சாகுபடி செய்து, அவற்றை சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தோம். திடீரென சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு சாகுபடியை நிறுத்திவிட்டு பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட முடிவு செய்தோம். இதற்காக பட்டுப்புழு வளர்ப்பு அதிகாரிகளிடம் முறையான பயிற்சி பெற்று பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினோம். அதற்காக வீட்டிலேயே 50 பட்டுப்புழுக்களை வாங்கி வந்து வளர்த்துப் பார்த்தோம். அனைத்து புழுக்களுமே கூடுகள் பின்னி இருந்தன. இதில் கிடைத்த நம்பிக்கையில் பட்டுப்புழு வளர்ப்பை விரிவாக செய்ய ஆரம்பித்தோம்’’ சொந்த ஊரில் இருந்து நெல்லை வந்தது, விவசாயத்தில் ஆரம்பித்து பட்டுப்புழு வளர்ப்புக்கு வந்தது என தங்களின் பிளாஷ்பேக்கை சுருக்கமாக பேசிய பானுரேகா, பட்டுப்புழு வளர்ப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பட்டுப்புழுக்களை மிக கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். தீவனமாக கொடுக்கப்படும் மல்பெரி இலைகள்தான் தரமான புழுவை நமக்குக் கொடுக்கும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, எம்ஆர் 2 ரக மல்பெரி இலைகளைக் கொடுக்கிறேன். இலைகளை வெளியில் இருந்து வாங்கினால் நமக்கு பெரிய நஷ்டம்தான். அதனால் நாங்களே எம்ஆர்2 ரக மல்பெரியை நடவு செய்தோம். பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எங்களது செம்மண் நிலத்தை நன்கு புழுதி பறக்க உழவு செய்து பதப்படுத்தினோம். இதில் நாட்டு மாட்டு எரு, மக்கிய குப்பைகளை அடியுரமாக இட்டேன். செடிகளை பத்து அடி நீளம், 3 அடி அகலம் என்ற கணக்கில் நடவு செய்தோம். அப்போதுதான் டிராக்டர் மூலம் களை எடுக்க முடியும். மல்பெரி செடிகளை நடவு செய்து 6 மாதத்திற்கு பின்னர்தான் அறுவடை செய்து பட்டுப்புழுக்களுக்கு தீவனமாக கொடுப்பேன். இந்த செடிகளுக்கு அரசு கொடுத்த மானியத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறேன்.

தற்போது பட்டுப்புழுக்களுக்கென்று 70×20 மற்றும் 80×20 என்ற அளவுகளில் இரண்டு குடில்கள் அமைத்திருக்கிறோம். 2018ல் அமைத்த குடிலுக்கு அரசு கொடுத்த மானியத்தை சேர்த்து ரூ.5 லட்சம் செலவானது. நான்கு வருடத்திற்கு முன்பு அமைத்த 80×20 குடிலுக்கு அரசு கொடுத்த மானியத்தோடு சேர்த்து ரூ.14 லட்சம் செலவானது. குடில் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் புழுக்கள் என்ற அளவில் வளர்த்து வருகிறோம். ஒரு பேட்ஜ்க்கு தீவனம் கொடுக்க ஒரு ஏக்கர் என குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் தேவைப்படும். நாங்கள் தீவனத்திற்காக 7 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடிகளை நடவு செய்திருக்கிறோம். ஒரு பேட்ஜ் பட்டுக்கூடுகள் கிடைத்ததும் அடுத்த பேட்ஜ்க்கான மல்பெரி செடிகள் தயார் நிலையில் வளரும்படி பார்த்துக்கொள்வோம். இந்த முறையில் நாங்கள் ஆண்டுக்கு 10 மாதங்கள் வரை பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து வருகிறோம். பட்டுக்கூடு 2 கிராம் எடைக்கு அதிகமாக இருந்தால் அதிக விலை கிடைக்கும்.பட்டுப்புழு வளர்ப்புக்கான இரண்டு குடில்களிலும் கூரைகள் சிமெண்ட் ஷீட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடில்கள் சுமார் 15 அடி உயரம் கொண்டவையாக இருக்கும். பட்டுப்புழு வளர்ப்புக்கு தட்பவெப்ப நிலை மிக அவசியம். 20 – 25 டிகிரி செல்சியஸ்க்கு கீழே வெப்பம் இறங்கிவிடக் கூடாது. 25 டிகிரி செல்சியஸ்க்கு மேலேயும் வெப்பம் அதிகரிக்கக்கூடாது. காற்றோட்டம் அவசியம். குடிலின் மேலே எப்போதும் ஓரளவிற்கு ஈரப்பதம் இருப்பதற்காக அவ்வப்போது டியூப் மூலம் தண்ணீர் தெளிப்போம். புழுவைத் தாக்கும் ஈக்களைக் கட்டுப்படுத்தவும், வெயில் இறங்காமல் இருக்கவும் மேலே வலை கட்டியிருக்கிறோம்.

இவை அனைத்தையும் தயார் செய்த பிறகு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, பட்டுப்புழு வளர்ப்பதற்கு விண்ணப்பம் அளித்தோம். அவர்கள் கொடுத்த பட்டுப்புழுக்களை வளர்த்து 25வது நாளிலேயே வருமானம் பார்த்தோம். இளம் புழுக்களை பொருத்தவரையில் மல்பெரி இலைகளை முதல் 14 நாட்கள் வேகமாக உண்ணும். பிறகு இரண்டரை நாட்கள் தோலுரிக்கும். அப்போது, மல்பெரியை உண்ணாது. இதிலிருந்து 18வது நாளில் தொடர்ந்து ஒன்றரை நாளுக்கு பட்டுப்புழு தனது வாயால் பட்டுக்கூடு கட்டத் தொடங்கும். முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை பட்டுப்புழுக்களை ஒவ்வொரு பருவங்களாக பிரித்து வைக்கிறோம். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள் நோய்களை உண்டாக்கும் என்பதால் அவற்றை சிறந்த முறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழு வளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால் தனியாக புழு வளர்ப்பு மனை அமைத்து பராமரிக்கிறோம். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவு கொடுப்போம்.

இதில் வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்கு கிறது. பட்டுப்புழுக்கள் மிக வேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணுபவையாக இருக்கும். பட்டுப்புழு உற்பத்தியில் குடிலை சுகாதாரமாக வைப்பதும் முக்கியம். இதனால் சுத்தம் செய்வதற்கும், கிருமி நீக்கம் செய்வதற்கும் ஏற்றவாறு குடில்களை அமைத்திருக்கிறோம். ஒரு மாதம் முழுக்க சேகரித்த பட்டுக்கூடுகளை நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம். பட்டுக்கூடுகளின் விலையில் அவ்வப்போது மாற்றம் இருக்கும். கடந்த மாதம் ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.595க்கு விற்பனையாகிறது. இரண்டு குடில்களிலும் சேர்த்து இந்த மாதத்தில் (ஏப்ரல்) எங்களுக்கு 236 கிலோ பட்டுக்கூடு கிடைத்தது. இதனை விற்பனை செய்ததில் ரூ.1,40,425 வருமானமாக கிடைத்தது. இதில் ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு ரூ.35 ஆயிரம் போக ரூ.1,05,000 லாபமாக கிடைத்தது. அனைத்து கூடுகளையும் விற்பனை செய்த பிறகு ஒரு வாரம் குடிலை சுத்தம் செய்து அடுத்த பேட்ஜ் பட்டுப்புழுக்களை வாங்கி வந்து வளர்ப்போம். அப்போது தேவையற்ற பாக்டீரியாக்கள் இருக்காது. புழுக்களை வாங்கும்போது அவை தரமானதாக இருக்கிறதா? என்பதையும் கவனித்து வாங்குவோம். நல்ல முறையில் கவனித்து மல்பெரி மற்றும் பட்டுப்புழுக்களை உற்பத்தி செய்தால் மட்டுமே நல்ல லாபம் பெற முடியும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பானுரேகா: 90803 21941.

கூடுகள் கட்டாத பட்டுப்புழுக்களை தனியாக எடுத்து நோய் தாக்கியுள்ளதா? என்பதைக் கவனிக்க வேண்டும். நோய் தாக்கிய புழுக்கள் இருந்தால் அவற்றை எடுத்து அகற்றி விட வேண்டும். நோய் தாக்கிய புழுக்களை அப்படியே வீசக்கூடாது. சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட்டு எடுத்த பின்பு தூரமான இடத்தில் குழி தோண்டி புதைத்து விட வேண்டும். இல்லையென்றால் எரித்துவிட வேண்டும் என சில டிப்ஸ்களைத் தருகிறார் பானுரேகா.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi